ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் விதித்துள்ள கட்டுப்பாடுகள் என்னென்ன?

சென்னை,

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21ந் தேதி நடைபெறும் என்று நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதுமுதல் ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன.

இதன் காரணமாக முறைகேடுகளை தடுக்க பல்வேறு அதிரடி கட்டுப்பாடுகளை விதித்துள்ள தேர்தல் ஆணையம்.

நேற்று பிற்பகல் தலைமை செயலகத்தில்,  இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டில்லியில் இருந்தபடி ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் குறித்து வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில், தமிழக தேர்தல் ஆணையாளர் ராஜேஷ் லக்கானி,  சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனையின்போது, ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்தமுறை ஏற்பட்ட தவறுகள், பணப்பட்டுவாடா போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க எடுக்கப்பட வேண்டிய அதிரடி நடவடிககை குறித்து விவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, பல்வேறு உத்தரவுகளை தேர்தல் ஆணையம் தமிழக போலீஸ் கமிஷனருக்கு வழங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த ஆலோசனை கூட்டம் முடிந்ததும் தமிழக தேர்தல் ஆணையாளர் ராஜேஷ் லக்கானி கூறியதாவது,

தேர்தல் பணிகளில் 1,664 தேர்தல் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றார். மேலும்,  ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்திலும் மத்திய அரசு அதிகாரி ஒருவர் வாக்குப்பதிவை கண்காணிப்பார் என்றார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் தற்போது மொத்தம் 2,26,992 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 1,10,411 பேரும், பெண்கள் 1,16,522 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 99 பேரும் உள்ளனர்.

தேர்தலுக்காக அந்த தொகுதியில்,  256 வாக்குப்பதிவு மையங்கள் ஏற்படுத்தப்படும்.

மேலும், வாக்களித்தவர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் நவீன வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படும் என்றார்.

மேலும், கடந்த தேர்தலின்போது ஆர்.கே.நகர் தொகுதியில் 10 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தற்போது அதைவிட கூடுதல் வீரர்கள் ஈடுபட வாய்ப்பு உள்ளது.

256 வாக்குப்பதிவு மையங்களிலும் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை இணை இயக்குனர் வேலுச்சாமி தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்த அடுத்த நிமிடம் முதலே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். அதன்படி, ஆர்.கே.நகர் தொகுதியில் நேற்று மதியம் முதலே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டன.

ஆர்.கே.நகர் தொகுதிக்குள் எந்த அரசு திட்டம் அறிவிக்கவோ, செயல்படுத்தவோ கூடாது.

மாநில தலைநகர் சென்னை என்பதால் சென்னை மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட மாட்டாது.

மிழக அமைச்சர்கள் யாரும் அரசு வாகனங்களில் ஆர்.கே.நகர் தொகுதிக்குள் செல்லக் கூடாது.

அனுமதியின்றி கட்சி கொடியை வாகனங்களில் கட்டி செல்லக்கூடாது.

கடந்த முறை ஆர்.கே.நகர் தொகுதியின் அனைத்து சாலைகளிலும் ரகசிய கண்காணிப்பு கேமரா வைத்து கண்காணிக்கப்பட்டது.

இந்த முறை வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க ஒவ்வொரு தெருக்களிலும் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும்.

கடந்த தேர்தலின்போது நடத்தை விதிமுறைகளை மீறியதாக 33 பேர் மீது எப்ஐஆர் போடப்பட்டது. இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வழக்கில் தீர்ப்பு வந்தால் மட்டுமே சம்பந்தப்பட்ட நபர் 3 ஆண்டுகள் தேர்தலில் நிற்க முடியாத நிலை ஏற்படும்.

ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் வருகிற 28ம் தேதி வரை பெயர்களை சேர்க்க அனுமதி அளிக்கப்படும்.

ஆர்.கே.நகர் தொகுதிக்குள் 24 மணி நேரமும் வாகன சோதனை நடத்த உத்தர விடப்பட்டுள்ளது.

ரூ.50 ஆயிரத்துக்கு அதிகமாக பணம் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யப்படும்.

பறக்கும் படையினர் இரு சக்கர வாகனங்களில் சென்றும் அதிரடி சோதனையில் ஈடுபடுவார்கள்.

முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் பற்றி புகார் தெரிவிக்க  1950, 1913 என்ற இலவச தொலைபேசி எண்ணிலும், 94441 23456 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிலும் புகார் அளிக்கலாம்.

 

இவ்வாறு அவர் கூறினார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: RK Nagar By-Election: What are the restrictions imposed by the Election Commission?, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் புறக்கணிப்பு: சி.பி.ஐ.
-=-