நெட்டிசன்:

மூத்த பத்திரிகையாளரும் ஆர்.கே. நகர் தொகுதிவாசியுமான நா.பா. சேதுராமன் அவர்களின் முகநூல் பதிவு:

ஆர்.கே. நகர் தொகுதி வாசிகளுக்கு கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டுகிறது” என்று பதிவுகளை போடும் முன் தொகுதிக்குள் போய் வாருங்கள், ஒரே ஒரு முறையாவது….

ஆர்.கே. நகர் தொகுதிவாசிதான் நான்…

ஈனம் , மானம், சூடு, சொரணை அதிகமிருக்கிற விளிம்புநிலை மக்கள்தான் தொகுதியில் 80 % பேர்… அதே 80% மக்கள் அன்றாடக் கூலிகள்… எஞ்சிய 20 % சதவீதம்தான் “இப்படியும், அப்படியுமான” கமர்ஷியல் உலகில் இருப்பவர்கள்… 20% ஆட்களையும் வீடுகளையும் மட்டும் பார்க்காதீர்கள்… கீழேழேழே இருக்கும் 80 % மக்களையும் பாருங்கள்… டிஜிட்டல் இந்தியாவின் ” மொகரக்கட்டை” ஒளிர்வதைப் பார்க்கலாம்…

குடிநீருடன் கலக்கும் கழிவுநீர்..

இன்னும் பல வீடுகளில் இரண்டுவேளை அடுப்பு எரிவதில்லை… உண்மை நிலை என்னவென்று அறியாமல் சிலர் பதிவிடுவதும், அதற்கு பின்னூட்டமாக “கொடுத்து வைத்த மக்கள்” என்று உள்குத்து வைப்பதும்தான் வலிக்கிறது… பச்சையா சொல்லணும்னா, எந்த மசுராண்டி, மவராசி தொகுதி எம்.எல்.ஏ. வாக வந்தாலும், போனாலும் கழிவு நீர், குடிநீர் பஞ்சம் அப்படியேதான் ஸ்டூல் போட்டு உட்கார்ந்திருக்கிறது… அதிலும் அந்த ஸ்டூல் பேலன்ஸ் இல்லாமல் ஆடுகிற ஸ்டூல்…

தொகுதி மக்களை நிரந்தர அழுக்கிலும், சுவாச நோயிலும் வைத்திருக்கும் கொடுங்கையூர் குப்பை மேட்டுக்கு மாற்று வழி காண ஒரு முயற்சியை இதுவரையில் எடுத்திருப்பார்களா ? போராடிய இடது சாரிகளுக்கு சிறை, செய்தி சேகரித்தவனுக்கு உதை … இதுதானே இதுவரையில் நடந்திருக்கும் கதை ?

வடிகால் வசதியின் லட்சணம்

தொகுதியில் சில பகுதியின் பெயரையும் கேளுங்கள், பணக்கார நகர், எழில்நகர், ஜஸ்டிஸ்நகர், ஜெ.ஜெ.நகர், எம்.ஜி.ஆர். நகர், கலைஞர் நகர், காமராஜர் நகர், மூப்பனார் நகர், அண்ணல் அம்பேத்கர் நகர்… இன்னும் இருக்கிறது !

இன்னமும் அரசின் அத்தனை உதவிகளுக்கும் இதே பஞ்சப்பராரி மக்களிடம் லஞ்சப் பிச்சை எடுக்கும் கட்சிக்காரர்களும், அதிகாரிகளும் இந்தத் தொகுதியில்தான் அதிகம்… தொண்ணூறு வயது மூதாட்டியும் முன்னூறு ரூபாயை மூன்றுமுறை பிச்சை கொடுத்துதான் இங்கே முதியோர் பென்ஷனை வாங்க முடியும்.

கணவனால் கைவிடப்பட்ட பெண்ணென்றால் அதைவிட அதிகமாய் கொடுத்துதான் கண்ணீரை துடைத்துக் கொள்ள முடியும்… இவைகளை முழுமையாக நான் களைவேன் என்று பொது இடத்தில் சத்தியம் செய்து

பென்சன் கிடைக்காததால் போராட்டம்

வாக்கு சேகரித்தவன் கூட ஜெயித்த பிறகு தொலைந்தே போனான்….

பின்குறிப்பு :
தொகுதிமக்களுக்கு இதுவரை வாக்குறுதி அளித்தவர்களின் உண்மையான முகவரியையும் அப்படியே தெரிந்து கொள்ளுங்கள். /// எண் : 111, கைவிட்டார் தெரு, முதலும் முடிவுமான முட்டுச்சந்து, இளிச்சவாயன் போஸ்ட், தலைமறைவு மாவட்டம், அம்மண மாநிலம், அஞ்சல் குறியீட்டு எண் : 0000000000000000000 /// முடிந்தால் தொகுதி மக்கள் சார்பில் ஒரு கடுதாசி போட்டுப்பாருங்கள்…. ? !

முடிந்தவரையில் அனைவரும் எங்கள் துயரங்களில் பங்கெடுத்து ஆறுதல் சொல்லுங்க, மக்கா…. வெந்து ஏற்கெனவே வேல்பாய்ச்சிய புண்ணில் ஆசிட் ஊற்றாதீர்கள்….