சென்னை,

ர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி இன்று தேர்தல் கமிஷனால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தனது ஆதரவை திமுக வேட்பாளருக்கு வழங்கும் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் கூறி உள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்,

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் டிசம்பர் 21ம் தேதி நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த  இடைத்தேர்தலில் திமுகவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என்றும், திமுக நிறுத்தும் வேட்பாளருக்கு காங்கிரஸ் தனது ஆதரவை தெரிவிக்கும் என்று முதலாவதாக தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

திமுகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் திமுகவுக்கு தனது ஆதரவை அளிப்பதாக கூறி உள்ளது.

இதுதொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இந்திய தேர்தல் ஆணையம் காலம்கடத்தியாவது ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதியை டிசம்பர் 21- அன்று அறிவித்திருக்கிறது. இந்த தொகுதியில் தேர்தல் ஏன் நிறுத்தப்பட்டது என்பதற்கான காரணங்கள் பல கூறப்பட்டாலும் அனைவருக்குமான உண்மையான விடைகளும், பதில்களும் இது வரை வெளியாக வில்லை என்பது நாட்டு அரசியலில் ஒரு துர்திஷ்டமான நிகழ்வாக இருக்கிறது.

அ.இ.அ.தி.மு.கவிற்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்ட பிறகு தான் இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று தமிழக மக்கள் பொதுவாக பேசி வந்தது இப்போது உண்மையாக்கப்பட்டு உள்ளது.

எது எப்படி இருந்தும் தி.மு.க. நீதிமன்றத்தில் அணுகியதால் தான் இந்த இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது என்று கூறுவதில் உண்மை இல்லாமல் இல்லை. இந்த இடைத்தேர்தலில் தொகுதி வாக்காளர்கள் தமிழக மக்களுக்கு நல்லது எதனால் நடக்கும் என்று எடை போட்டு பார்த்து வாக்களிக்க கடமைப் பட்டிருக்கிறார்கள்.

இருப்பினும், இந்த இடைத்தேர்தலை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரவேற்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக், திராவிட முன்னேற்ற கழக தலைமையிலான கூட்டணியில் தொடர்ந்து நீடித்து வரும் கட்சியாகும். தி.மு.கவின் செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் வேட்பாளரை விரைவில் அறிவிக்க இருக்கிறார். வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்ட வுடன் தி.மு.க.வின் வரலாறு காணாத வெற்றிக்கு தொகுதி வாக் காளர்கள் பேராதரவு அளித்து புதிய சரித்திரம் படைக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேட்டுக்கொள்கிறது.

தொகுதியிலுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகளுடன் மாவட்ட, மாநில நிர்வாகிகள் இணைந்து இரவு, பகல் என்று பாராமல் பாடுபட்டு வெற்றிக்கு உழைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.