ஆண்டுக்கு ஒரு தேர்தல் வருகிறது ஆர் கே நகர் தொகுதியில் : ஒரு அலசல்

சென்னை

சென்னை ஆர் கே நகர் தொகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து வருடத்துக்கு ஒரு தேர்தல் நடைபெறுகிறது.

கடந்த 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைத்தது.  சென்னையில் ஆர் கே நகர் தொகுதியில் வெற்றிவேல் சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.  மூன்று வருடங்களுக்குப் பிறகு  2014ஆம் ஆண்டு  ஆர் கே நகர் உள்ளடங்கிய பாராளுமன்ற தொகுதியில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றது.  அப்போது தொடங்கி வருடத்துக்கு வருடம் தேர்தல் திருவிழாதான் அந்தத் தொகுதியில்.

சொத்துகுவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் ஜெயலலிதாவின் பதவி பறி போனது.   பிறகு மேல் முறையீட்டில் பெஙகளூரு உயர்நீதிமன்றம் 2015 ஆம் வருடம் அவரை விடுதலை செய்தது.  அவர் சட்டமன்ற உறுப்பினராவதற்காக வெற்றிவேல் ராஜினாமா செய்தார்.   அதன் பின் 2015ஆம் வருடம் ஜெயலலிதா அந்தத் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார்.

சட்டசபைக் காலம் 2016ல் முடிவு பெற்றது.  அதைத் தொடர்ந்து ஜெயலலிதா மீண்டும் அதே தொகுதியில் நின்று வெற்றிப் பெற்றார்.  கடந்த  2016ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவையொட்டி இந்த வருடம்  இடையில்   அறிவிக்கப்பட்ட இடைத் தேர்தல் பணப்பட்டுவாடா புகார் காரணமாக தடை செய்யப்பட்டது.

அதன் பின் ஆர் கே நகர் தொகுதியில் 45ஆயிரம் போலி வாக்காளர்கள் இருப்பதாக திமுக வழக்கு தொடர்ந்ததை அடுத்து தேர்தல் ஆணையம் 45000 போலி வாக்காளர்களை நீக்கியது.  பின்பு உயர்நீதிமன்றத்தின் உத்தரவிற்கிணங்க தற்போது டிசம்பர் 21ஆம் தேதி அன்று தேர்தல் நடைபெறும் என ஆணையம் அறிவித்துள்ளது.

ஆக 2014 ஆம் வருடம்  பாராளுமன்ற தேர்தல், 2015 மற்றும் 2016 ஜெயலலிதா வெற்றி பெற்ற தேர்தல், தற்போது 2017ல் மீண்டும் இடைத் தேர்தல் என வருடத்துக்கு ஒரு வருடம் ஆர் கே நகர் தொகுதியில் தேர்தல் நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.