சென்னை:

ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா தொடர்பான வழக்கில், வருமான வரித்துறை பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், வருமானவரி சோதனையின் போது கைப்பற்றப்பட்ட  ஆவனங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை என்று தெரிவித்து உள்ளது.

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் டிடிவி தினகரன் களமிறங்கினார். அப்போது வாக்காளர்களுக்கு ஆயிரக்கணக்கில் பணப்பட்டுவாடா நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, ஆர்.கே.நகர்  திமுக வேட்பாளர் மருது கணேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில், பணப்பட்டுவாடா குறித்து சிபிஐ விசாரணை கோரி  வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் வருமானவரித்துறைக்கு சென்னை உயர்நீதி மன்றம் பதில் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதையடுத்து வருமான வரித்துறை  தலைமை ஆணையர் மற்றும் தலைமை இயக்குநர் சார்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ஆர்.கே.நகர் தேர்தல் பணப்பட்டுவாடா தொடர்பான புகாரில் கடந்த 2017ம் ஆண்டு  ஏப்ரல் மாதம் 7ம் தேதி அன்று அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடைபெற்றது. அப்போது, அங்கிருந்து ரூ. 4,71,00,000 பறிமுதல் செய்யப் பட்டதாகவும், அது தொடர்பாக, ஏப்ரல் 9ம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்துள்ளதாகவும் கூறி உள்ளது.

மேலும், வருமான வரித்துறை சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங் கள்  ரகசியமானவை, அதனை பொது வெளியில் வெளியிடவில்லை என்றும் தெரிவித்து உள்ளது. அமைச்சர் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவனங்கள் மற்றும் பொருட்கள் குறித்து  வரும் டிசம்பர் 31 வரை தங்களுக்கு அவகாசம் உள்ளதாகவும் வருமான வரித்துறை தனது அறிக்கை மூலம் சுட்டிக்காட்டியுள்ளது.