சென்னை:

மிழ்த் திரைப்பட இயக்குனர் சங்கத்தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில், தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி  வெற்றி பெற்றார்.

2019-21 ஆண்டுக்கான தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தல் சென்னை வடபழனியில் உள்ள இசைக் கலைஞர்கள் சங்க வளாகத்தில் நேற்று நடைபெற்றது.  நேற்று காலை முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற தேர்தலில் ஆர்.கே.செல்வமணி வெற்றி பெற்றுள்ளார்.

தமிழ்த்திரைப்பட இயக்குனர் சங்கத்திற்கு.  ஒரு தலைவர், 2 துணைத் தலைவர்கள், ஒரு பொதுச் செயலாளர், 4 இணைச் செயலாளர்கள், ஒரு பொருளாளர், 12 செயற்குழு உறுப்பினர்கள் போட்டி யிடுவதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.

3 ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்நாடு இயக்குநர் சங்கத்தில் 2,400 பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். நேற்று நடந்த தேர்தலில் 1,503 வாக்குகள் பதிவாகின.

தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி 1,386 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட வித்யாசாகர் 100 வாக்குகள் பெற்றுள்ளார்.

பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.வி.உதயகுமாரும், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட பேரரசுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

துணைத் தலைவர் தேர்தலில் கே.எஸ்.ரவிக்குமார் 1,289 வாக்குகளும், மற்றொரு வேட்பாளரான ரவி மரியா 1,077 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர்.

முன்னதாக, தமிழ்த் திரைப்பட இயக்குனர் சங்கத்தலைவராக பாரதிராஜா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில், தேர்தல் மூலமே தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று கூறி, அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.