சென்னை

ற்போது நடைபெற்று வரும் திரையுலக வேலை நிறுத்தம் குறித்து  இயக்குனரும் பெப்சி தலைவருமான ஆர் கே செல்வமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

பல வெற்றிப் படங்களை இயக்கியவர் ஆர் கே செல்வமணி.    இவர் அறிமுகப்படுத்திய நடிகை ரோஜாவை திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.  மேலும் இவர் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்சி) தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.  இவர் நேற்று செய்தியாளர்களுக்கு தற்போதைய திரையுலக வேலை நிறுத்தம் குறித்து பேட்டி அளித்தார்.

ஆர் கே செல்வமணி தனது பேட்டியில், “திரைத்துறையில் நேரடி மற்றும் மறைமுக பணியாளர்களாக 5 லட்சத்துக்கும் மேல் உள்ளனர்.  தற்போதைய வேலை நிறுத்தத்தினால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.   அரசு இதில் தலையிட்டு தீர்வு காண வேண்டும்.  திரைத்துறைக்கு தனி வாரியம் அமைத்து அதில் ஐஏஎஸ் அதிகாரிகள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோரை இணைக்க வேண்டும்.

திரைப்படங்கள் வெற்றி அடைந்தாலும் தயாரிப்பாளர்களுக்கு உரிய பங்கு கிடைக்காமல் நஷ்டம் அடைகின்றனர்.   அதை சீர் செய்ய வேண்டும்.  தற்போது திரையனரங்குகள் எண்ணிக்கை குறைந்ததுடன் கட்டணமும் அதிகமாகி உள்ளது.   அதனால் அடித்தட்டு மக்கள் திரைப்படம் பார்ப்பது இல்லை.    அதனால் பாகுபலி போன்ற பிரம்மாண்டமான மேல்தட்டு மக்களுக்கான படங்கள் மற்றுமே எடுக்கப்பட்டு வருகின்றன.

சிறிய கிராமங்களில் 5000 பேர் வசித்தால் அங்கு 150 பேர் பார்க்கக் கூடிய சிறிய திரையரங்குகளை அரசு அமைக்க வேண்டும்.   அந்த திரையரங்குகளில் ரூ. 25, 35 மற்றும் ரூ,50  என குறைந்த விகிதங்களில் கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும்.   இவ்வாறு செய்தால் கிராமப்புற மக்கள் திரையரங்குகளுக்கு வருவார்கள்.   திரைத் தொழில் முன்னேற வாய்ப்பு உண்டாகும்”  என தெரிவித்தார்.