புதுடெல்லி: விமானப்படையின் புதிய தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் தற்போதைய துணை தலைமை தளபதியாக பொறுப்பு வகிக்கும் ஏர் மார்ஷல் ஆர்கேஎஸ் பதெளரியா.

வரும் செப்டம்பர் 30ம் தேதியுடன் தற்போதைய தலைமை தளபதி பிஎஸ் தனோவா ஓய்வுபெறுவதால், அந்தப் பதவிக்கு பதெளரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால், தனோவா ஓய்வுபெறும் அதே நாளிலேயே பதெளரியும் ஓய்வுபெற வேண்டியது. ஆனால், தற்போது அவர் தலைமை தளபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளதால், அவர் 3 ஆண்டுகாலம் அல்லது 62 வயதுவரை, இவற்றில் எது முன்னதாக வருகிறதோ, அதுவரை பதவி வகிப்பார். அந்தவகையில் பார்த்தால் அவர் தலைமை விமானப்படை தளபதியாக 2 ஆண்டுகள் பொறுப்பு வகிப்பார்.

பதெளரியா, இதுவரை மொத்தமாக 4250 மணிநேரங்கள் பறந்துள்ளார் மற்றும் 26 வகைப்பட்ட போர் விமானங்களிலும் பறந்த அனுபவம் உள்ளவர். இவர் தென் பிராந்திய தலைமை விமானப்படை அதிகாரியாக 2017 மார்ச் முதல் 2018 ஆகஸ்ட் வரை பணியாற்றியுள்ளார்.