சாலை வசதிகளில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் தமிழ்நாடு: எடப்பாடி பெருமிதம்

நாமக்கல்:

சாலை வசதிகளில் இந்தியாவிலேயே சிறப்பான வசதிகளை கொண்டது தமிழ்நாடு என்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

நாமக்கல் மாவட்டம் திம்மநாயக்கன்பட்டியில் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல்வேறு நலதி திட்டங்களை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நாட்டிலேயே சிறப்பான சாலை வசதிகள் தமிழகத்தில்தான் உள்ளது என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய முதல்வர்,  நிர்வாக திறமை மிக்க அரசாக மாநில அரசு செயல்பட்டு வருகிறது. மாநில அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத்திட்டங்களால் இந்தியாவில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது.

“விவசாயப் பணி என்பது கடினமான வேலையாகும். விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் ஆகியோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழ்நாடு அரசு விவசாய நலத்திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது.

60% விவசாய பணிகளை நம்பியிருக்கும் நமது நாட்டில் தொழில் வளம், சுகாதாரம், சாலை வசதி போன்ற அனைத்து துறைகளிலும் மாநில அரசு முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது.

ஏற்கனவே தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், திருச்செங்கோடு, மல்லியகரை வரை சாலை விரிவாக்க பணிகளை செய்தார். தற்போது மல்லியகரை முதல் ஆத்தூர் வரை ஈரோடு-மல்லியகரை சாலை சீரமைக்கப்படும்.

பொதுமக்களுக்கு விபத்தில்லாத-ஆபத்தில்லாத பயணம் கிடைப்பதற்காக சாலைகள் விரிவாக்கம் செய்யப்படுகின்றன. இந்தியாவிலேயே சிறந்த சாலை வசதிகள் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

தமிழகத்தில் குடிநீர், தங்கு தடையின்றி கிடைக்கவும் விவசாய பணிகள் தொடர்ந்து நடைபெறவும் ஏரி-குளங்களில் குடி மராமத்துப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கிடைக்கும் வண்டல் மண்ணை கொண்டு விவசாய நிலங்களுக்கு இயற்கை உரமாக பயன்படுத்த முடிகிறது. பருவ காலங்களில் பெய்யும் மழைநீர் வீணாகாமல் தடுக்க ஓடைகளில் தடுப்பணைகள் கட்டப்பட்டு, நிலத்தடி நீர் மேம்டுத்தப்படுகிறது. இது, மூன்றாண்டு திட்டமாக ரூபாய் ஆயிரம் கோடி  மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

மாநிலத்தில் சிறந்த கட்டமைப்பு வசதிகளை மாநில அரசு ஏற்படுத்தி வருகிறது. புயல்,வெள்ளம், வறட்சி ஆகிய அனைத்து இடர்பாடுகளுக்கும் மாநில அரசு நிவாரணம் வழங்குகிறது. வறட்சி நிவாரணம் வழங்கி உள்ளது.

தற்போது கஜா புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பல மாவட்டங்களில் சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் இதையெல்லாம் கவனிக்காமல், இதையெல்லாம் ஏற்றுக்கொள்ளாமல் புயல் நிவாரணம், வறட்சி நிவாரணம் இதையெல்லாம் விமர்சித்து வருகிறார்.

தமிழக அரசு பள்ளி மற்றும் உயர் கல்வித் துறைகளில் செயல்படுத்திவரும் நலத்திட்டங்களால் கல்வித்துறை மறுமலர்ச்சி பெற்றுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள், சீருடை, மிதிவண்டி, ரூ. 14 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா மடிக்கணினி இதுபோன்ற பல்வேறு நலத்திட்டங்களை மாநில அரசு வழங்கி வருகிறது.

ஒரு நாடு கல்வித் துறையில் வளர்ச்சி பெற்றால் எல்லா துறைகளிலும் வளர்ச்சி பெறும் என்பதற்கு தமிழ்நாடு முன்னுதாரணமாக திகழ்கிறது. ஏழை எளிய மக்களை அவர்களின் குழந்தைகள் ரூ. 14 ஆயிரம் மதிப்புள்ள மடிக்கணினியை வாங்க முடியாது என்பதை கருத்தில் கொண்டு, மாநில அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி உலக அளவில் விஞ்ஞானக் கல்வியை அளித்து வருகிறது.

2011-ம் ஆண்டுக்கு முன்பு திமுக ஆட்சியில் இதுபோன்ற நலத்திட்டங்கள் கிடையாது. 2011-ம் ஆண்டுக்கு பிறகு அம்மா அவர்களின் ஆட்சியிலும் தற்போதைய ஆட்சியிலும் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது.

இதனை குடியரசு துணை தலைவரும் பாராட்டியுள்ளார். அனால், அதை பொறுத்துக்கொள்ள முடியாத எதிர்கட்சி தலைவர் வேண்டும் என்றே குறைகூறி வருகிறார்.  அவர்களின் குற்றச்சாட்டுகளை முறியடித்து தமிழக அரசு அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கமணி, சமூக நலம் சத்துணவு திட்டத் துறை அமைச்சர் சரோஜா,  நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மு. ஆசியா மரியம், நாடாளுமன்ற-சட்டப்பேரவை உறுப்பினர்கள், அதிமுகவினர், பொதுமக்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: CM Edapadi is proud, Edappadi palanisamy, Road facilities, Road facilities in Tamilnadu, Tamilnadu The best state in India, இந்தியா சாலை வசதி தமிழகம், எடப்பாடி பழனிச்சாமி, சாலை வசதி தமிழகம், சாலை வசதிகள், சிறந்த சாலை வசதிகள், சிறந்த சாலை வசதிகள் கொண்ட மாநிலம் தமிழ்நாடு, நாமக்கல் நிகழ்ச்சி, முதல்வர் எடப்பாடி
-=-