திருச்சி:

திருச்சி மாவட்டம், மணப்பறை பகுதிகளில் வெடிக்காத ராக்கெட் லாஞ்சர்கள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டிருப்பதால் அப்பகுதி மக்கள் பெரும் பதட்டத்தில் இருக்கிறார்கள்.

மணப்பாறை பொத்தமேட்டுப்பட்டியில்  மாதா டிரேடர்ஸ் என்கிற பழைய இரும்புக்கடை செயல்படுகிறது. கடந்த 29-ம் தேதி  இந்த கடையில், எடைக்குப் போடப்பட்ட ராக்கெட் லாஞ்சரின் அடிப்பாகம் வெடித்தச் சிதறியது.  இதில்  மாரியப்பன் என்பவர் பலியானார்.  மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து காவல்துறையினர் நடத்திய  சோதனையில், ஒரு பழைய இரும்புக் கடையில் 25 ராணுவ குண்டுகள் கைப்பற்றப்பட்டன.

மணப்பாறையை அடுத்த வீரப்பூர் அருகே உள்ள வீரமலைப்பாளையத்தில், மலை அடிவாரத்தில் அவ்வப்போது  இந்திய ராணுவ வீரர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறுவது வழக்கம். இதற்காக அங்கு ராணுவ வீரர்கள் முகாமிட்டு, பயிற்சி எடுப்பது உண்டு.  வனத்துறைக்குச் சொந்தமான  இந்த வீரமலை அடிவாரத்தில் பதுங்கு குழிகள் இருக்கின்றன.

இந்த துப்பாக்கி பயிற்சிகளின்போது, பலவகையான துப்பாக்கி குண்டுகள், ராக்கெட் லாஞ்சர் எனப் பல வகையான குண்டுகள் பயன்படுகின்றன. ஆகவே வெடித்துச் சிதறும் சில குண்டுகள் அப்படியே கிடக்கும்.  ராணுவ வீரர்கள் பயிற்சி முடித்துச் சென்றதும், அந்தப் பகுதியைச் சேர்ந்த  சிலர், வெடித்த குண்டுகளின் பாகங்களை எடுத்துச் சென்று, பழைய இரும்புக் கடையில் கொடுத்து  பணம் வாங்குவர்.

தற்போது வெடிக்காத ராக்கெட் லாஞ்சர்களையும்  எடுத்துச்சென்று பழைய இரும்புக் கடையில் போட்டுவிடுகின்றனர்.  அவற்றை வாங்கும் பழைய இரும்புக் கடைக்கார்கள் அந்தக் குண்டுகளை உடைக்க முயற்சிக்கும் போது வெடித்துச் சிதறி, பலியாகிவிடுகிறார்கள்.

தற்போது, துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறும் இடத்தில் உள்ள மலையடிவாரத்தில், பல்வேறு வகையான குண்டுகள் வெடிக்காமல்  கிடக்கின்றன.   சிறிய தோட்டாக்கள் முதல் ராக்கெட் லாஞ்சர்கள் வரை கிடப்பதால், அவை திடீரென வெடித்துவிடுமோ என்றும் அந்தப் பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துபோய் இருக்கின்றனர்.

வெடிக்காத குண்டுகளை உரிய பாதுகாப்போடு அதிகாரிகளே அகற்றிவிட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.