சென்னையில் கைதுசெய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபல ரவுடி ராக்கெட் ராஜா, நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நெல்லை மாவட்டம் ஆனைக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர், ராக்கெட் ராஜா. பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கராத்தே செல்வினுடன் இணைந்து செயல்பட்டுவந்த இவர், 1997 மார்ச் 26-ம் தேதி கராத்தே செல்வின் கொல்லப்பட்ட பின்னர், நாடார் மக்கள் சக்தி என்ற அமைப்பை நடத்திவருகிறார்.

கடந்த பிப்ரவரி 26-ம் தேதி, நிலத் தகராறு தொடர்பாக தனியார் பொறியியல் கல்லூரிப் பேராசிரியரான செந்தில்குமார் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், டாக்டர் பாலமுருகன், வழக்கறிஞர் பாலகணேசன், ராக்கெட் ராஜா உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்கு பதிந்து போலீஸார் தேடி வந்தனர்.

இந்த நிலையில், சென்னையில் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த ராக்கெட் ராஜா, கடந்த 7-ம் தேதி கைதுசெய்யப்பட்டார். அனுமதி இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்ததாக அவரை விருகம்பாக்கம் போலீஸார் கைதுசெய்து புழல் சிறையில் அடைத்தனர். பிறகு  அவர் கோவை மத்திய சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில், தனியார் பொறியியல் கல்லூரிப் பேராசிரியர் செந்தில்குமார் கொலை வழக்கு தொடர்பாக ராக்கெட் ராஜா இன்று நெல்லையில் உள்ள வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சந்திரா முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 23-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க  உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதற்கிடையே காவல்துறை சார்பாக ராக்கெட் ராஜாவை நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் மனுத்தாக்கல் செய்தனர். இது தொடர்பான விசாரணை நடைபெற்றது. விசாரணையை மாலை வரை ஒத்திவைத்து நீதிபதி  உத்தரவிட்டார்.