பாக்தாத்:

ரான் ராணுவ ஜெனரல் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்த பகுதிகளில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில், ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும், அமெரிக்க நிலைகளின் மீது  ராக்கெட் குண்டு, ஏவுகணை தாக்குதல்கள் நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஈரானின் முக்கியப் படைத் தலைவா் காசிம் சுலைமாணி அமெரிக்கா நடத்திய ஆளில்லா  விமானத்தாக்குதலில் பலியானார். இது அங்கு கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.

இந்த நிலையில், அமெரிக்க படைகள் மீது ஈரானின் இஸ்லாமிய புரட்சி ராணுவத்தின் காத்ஸ் படைப் பிரிவு தாக்குதல் நடத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஈரானின் அண்டை நாடான, ஈராக் தலைநகர் பாக்தாதில் கிரீன்ஜோன் எனப்படும் இடத்தில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் மீது 2 சிறிய ரக பீரங்கிக் குண்டுகளைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், ஒரு குண்டு கிரீன் ஜோன் பகுதிக்கு உள்ளேயும், மற்றொரு குண்டு அந்தப் பகுதிக்கு அருகிலும் விழுந்தது.

இதேபோல், பாக்தாதின் வடக்கேயுள்ள அல்-பாலட் விமானப் படைத் தளத்தில் முகாமிட்டு அமெரிக்க ராணுவத் தினர் மீதும் ராக்கெட்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேதம் குறித்த எந்தவித தகவலும் வெளியாகவில்லை.