விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் 2வது அரையிறுதியில் நடாலை வீழ்த்து, ரோஜர் பெடரர் இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

இங்கிலாந்தில், கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. இத்தொடரின் ஆடவருக்கான முதல் அரையிறுதி போட்டியில், செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், ஸ்பெயினின் ராபர்டோ பாட்டிஸ்டாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியிருந்தார்.

இத்தகைய சூழலில், இரண்டாவது அரையிறுதி போட்டி இன்று இரவு 8 மணிக்கு (இந்திய நேரப்படி) தொடங்கியது. சுமார் 11 வருடங்களுக்கு பிறகு மோதும் இவ்விரு உலக முன்னணி வீரர்களின் ஆட்டத்தை காண, ரசிகர்கள் குவிந்திருந்த நிலையில், ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்த பெடருக்கு, நடாலும் கடும் போட்டியை கொடுத்தார். இறுதியில் முதல் செட்டை 7 – 6 என்ற கணக்கில் பெடரர் கைப்பற்றினார்.

இரண்டாம் செட்டின் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தி வந்த நடால், பெடரை மேலும் முன்னேற முடியாமல் தடுத்ததோடு, 6 – 1 என்று செட்டை கைப்பற்றினார்.

மூன்றாவது செட்டில் சுதாரித்துக்கொண்ட பெடரர், தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்த தொடங்கியதோடு, நடாலுக்கு கடும் சவாலையும் ஏற்படுத்தினார். இந்த சுற்றில் 6 – 3 என்கிற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார் ரோஜர் பெடரர்.

கடைசி சுற்றிலும் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து வெளிப்படுத்திய ரோஜர் பெடரர், இறுதியாக 6 – 4 என்கிற நேர் செட் கணக்கில் அரையிறுதி போட்டியை வென்றார்.

இதன் மூலம் இறுதி போட்டியில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச்சை ரோஜர் பெடரர் சந்திக்க உள்ளார். இறுதி போட்டியில் ரோஜர் பெடரர் விளையாட உள்ள காரணத்தால், டென்னிஸ் ரசிகர்கள் இடையே அப்போட்டி பெரும் எதிர்பார்த்தை ஏற்படுத்தியுள்ளது.