கோலாலம்பூர்: கடலில், படகிலேயே மாதக்கணக்கில் சிக்கியிருந்து, மீட்கப்பட்ட ரோகிங்யா முஸ்லீம் அகதி குழந்தைகள், தங்களின் நரக வேதனை கொடுமையைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

‘சேவ் த சில்ரன்’ என்ற அமைப்பு அந்த பாவப்பட்ட அகதி குழந்தைகளின் வாக்குமூலங்களை வெளியிட்டுள்ளது.

வங்கக் கடலில், கடந்த ஏப்ரல் மாதம் திக்கில்லாமல் அலைந்து கொண்டிருந்த ஒரு படகிலிருந்து ரோகிங்யா அகதி குழந்தைகள் மீட்கப்பட்டனர். அவர்கள் அந்தப் படகில் அடிக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டதாகவும், பட்டினியில் தள்ளப்பட்டதாகவும் அக்குழந்தைகள் வாக்குமூலம் அளித்தனர்.

இதைவிடக் கொடுமையாக, அவர்களின் பெற்றோர்களின் உயிரற்ற உடல்கள், படகிலிருந்து கடலில் வீசப்பட்டதை கண்ணால் பார்க்கும்படியும் நிர்ப்பந்திக்கப்பட்டதாக கூறி, கேட்பவர்களின் உள்ளத்தைக் குமுறச் செய்துள்ளனர்.

இந்நிலையில், இம்மாதம் 8ம் தேதி, மலேசிய கடற்பகுதியில் லங்காவி கடற்கரைப் பகுதியில், சுமார் 200 ரோகிங்யா அகதிகளை சுமந்துகொண்டு வந்த படகு ஒன்று இடைமறித்து, மலேசிய நாட்டு அதிகாரிகளால் கரைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

மலேசிய கடற்பகுதியில், ரோகிங்யா அகதிகள் படகு மீட்கப்பட்ட செய்திகள் வெளியான பின்னணியில், மேற்படி, குழந்தைகளின் பரிதாப வாக்குமூலங்களை வெளியிட்டுள்ளது ‘சேவ் த சில்ரன்’ அமைப்பு.