விசாகப்பட்டணம்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 150 ரன்களுக்கு மேல் அடித்த ரோகித் ஷர்மா, முதல்தர போட்டிகளான லிஸ்ட் ‘ஏ’ போட்டியில் 11000 ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

மேலும், ஒருநாள் அரங்கில் 8 முறைகள் 150 ரன்களைத் தாண்டிய வீரர் என்ற சாதனையையும் செய்துள்ளார். மேலும், டெஸ்ட் போட்டியையும் சேர்த்து, ஒரு ஆண்டில் மொத்தம் 10 சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையும் இவருக்கே!

இந்த சதம் ரோகித்தின் 28வது ஒருநாள் போட்டி சதமாகும். ஒரே ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் 7 சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் ரோகித்தும் இணைந்தார். இப்பட்டியலில் டெண்டுல்கர் முதலிடத்தில் (9 சதங்கள்) உள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற மைல்கல்லையும் எட்டியுள்ளார். அவர் இந்தாண்டு நேற்றையப் போட்டியோடு சேர்த்து அடித்த சிக்ஸர்கள் மட்டும் 75.

மேலும், இந்த 2019ம் ஆண்டில், சர்வதேச போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலிலும் முதலிடம் பிடித்துள்ளளார். இவர் எடுத்துள்ள ரன்கள் 1427.