கட்டாக்: ஒரு ஆண்டில் மூன்றுவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையில், முன்னாள் இலங்கை வீரர் ஜெயசூர்யாவை முந்தினார் இந்தியாவின் ரோகித் ஷர்மா.

சமீபநாட்களில், ரோகித் ஷர்மாவின் ஒவ்வொரு போட்டியுமே சாதனைக் கற்களாக மாறிவருகிறது. அந்த வகையில் நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றவாது ஒருநாள் போட்டியும் அதற்கு விதிவிலக்காக அமையவில்லை.

நேற்றைய ஆட்டத்தில் அரைசதம் அடித்த ரோகித் ஷர்மா, 9 ரன்கள் எடுத்திருந்தபோது, 3 விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து மொத்தமாக 2442 என்ற ரன்களை எட்டினார்.

ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரை, 10 சதங்களுடன் 1490 ரன்களும், டெஸ்ட்டில் 556 ரன்களும், டி-20 போட்டிகளில் 396 ரன்களும் இவரது கணக்கில் அடங்குகிறது.

இலங்கை அணி உச்சத்தில் இருந்த காலகட்டமான கடந்த 1990களின் பிற்பாதியில், அதன் அதிரடி வீரர் ஜெயசூர்யா, மொத்தமாக சேர்த்து 2387 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.

அந்த சாதனையை 22 ஆண்டுகள் கழித்து முறியடித்துள்ளார் ரோகித் ஷர்மா. இதனையடுத்து இவருக்கு பல பக்கங்களிலிருந்தும் வாழ்த்துக்களும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.