ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை – ரோகித் ஷர்மா 8வது இடத்திற்கு முன்னேற்றம்!

துபாய்: ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில், இந்தியாவின் ரோகித் ஷர்மா, முதன்முறையாக 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதற்கு முன்பு, 14வது இடத்திலிருந்த ரோகித் ஷர்மா, தற்போது 6 இடங்கள் முன்னேறி 8வது இடத்திற்கு வந்துள்ளார்.

இங்கிலாந்திற்க எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் இவர் சிறப்பாக செயல்பட்டார். மேலும், மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய வீரர்களிலேயே அதிக ரன்கள் அடித்தவர் இவர்தான். முதல் இன்னிங்ஸில் 66 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 25(நாட்அவுட்) ரன்களும் அடித்தார்.

இதனால், தற்போது 8வது இடத்திற்கு வந்துள்ளார். குறுகிய வரலாறு கொண்ட இவரது டெஸ்ட் கேரியரில், ரோகித், 8வது இடம் பிடிப்பது இதுதான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் 3 இடங்களில், முறையே நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், ஆஸ்திரேலியாவின் லபுஷேன் ஆகியோர் தொடர்கின்றனர். இந்தியாவின் விராத் கோலி 5வது இடத்தில் உள்ளார்.