டில்லி

முன்னாள் உத்திரப் பிரதேச முதல்வர் என்.டி.திவாரியின் மகன் ரோகித் சேகர் திவாரியை கொலை செய்ததாக அவர் மனைவி அபூர்வா திவாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்திரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்வர் பதவி வகித்தவர் மறைந்த என் டி திவாரி ஆவார். இவருடைய மகன் ரோகித் சேகர் திவாரி இந்த மாதம் 16 ஆம் தேதி அன்று ஆபத்தான நிலையில் டில்லியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மரணம் அடைந்து விட்டதாக தெரிவித்தனர்.

அவர் மூக்கில் இரத்தம் வடிந்திருந்ததால் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட போது அவர் திடீர் மூச்சு அடைப்பினால் மரணம் அடைந்ததாக தெரிய வந்தது. காவல்துறையினர் விசாரணையில் ரோகித் திவாரி மற்றும் அவர் மனைவி அபூர்வா திவாரி ஆகியோருக்கிடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டதும் இருவரும் ஒரே வீட்டில் தனித்தனியாக வசித்ததும் தெரிய வந்தது.

தொடர்ந்து நடந்த விசாரணையில் அபூர்வா தனது கணவரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இன்று அபூர்வா திவாரியை தனது கணவர் ரோகித் சேகர் திவாரியை கொலை செய்த குற்றத்துக்காக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தக் கொலை ரோகித் சேகர் திவாரியின் சொத்துக்காக நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.