மெல்போர்ன்: டெஸ்ட் தொடரிலிருந்து விராத் கோலி இடையிலேயே நாடு திரும்பும் நிலையில், ரோகித் ஷர்மா சாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்றுள்ளார் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து பிரபலம் மெக்ராத்.

ரோகித் ஷர்மாவுக்கு, இதுவரை டெஸ்ட் போட்டிகளில் பெரியளவில் வாய்ப்பு கிடைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 32 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள ரோகித் எடுத்துள்ள மொத்த ரன்கள் 2141 ஆகும்.

இந்நிலையில் மெக்ராத் கூறியுள்ளதாவது, “ரோகித் ஒரு உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன். விராத் கோலி இடையிலேயே நாடு திரும்ப இருப்பதால், பேட்டிங் வரிசையில் ரோகித் ஷர்மா முன்னதாகவே களமிறக்கப்படலாம்.

ஒரு பேட்ஸ்மேனாக, கோலியின் இடத்தை ரோகித் பூர்த்திசெய்வார் என்று நம்புகிறேன். ஏனெனில், இவர் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்வார் மற்றும் அதற்கான திறன் அவருக்கு உள்ளது.

அதேசமயம், விராத் கோலி விலகுவதால், இந்திய அணியை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. அவர் விலகினாலும், அந்த அணியின் பேட்டிங் வரிசை பலமானதாகவே உள்ளது. புஜாரா, இந்தமுறையும் சாதிக்க வேண்டுமெனில், களத்தில் நெடுநேரம் நிற்க வேண்டியது அவசியம்” என்றுள்ளார் மெக்ராத்.