ரோஹித் குடும்பத்துக்கு முஸ்லிம் லீக் கொடுத்த நிதியுதவி செக் ரிட்டன்

ஐதராபாத்:

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்டி பயின்று வந்த மாணவர் ரோஹித் வேமுலா என்ற தலித் மாணவர் 2016ம் ஆண்டு பல்கலைக்கழக விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது குடும்பத்தினரும் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கினர்.

இதையடுத்து ரோஹித் வேமுலாவின் தாயார் ராதிகா வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அவர் புது வீடு கட்டிக் கொள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ரூ.20 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக அக்கட்சி சார்பில் வழங்கப்பட்ட 2 காசோலைகளில் ஒன்று வங்கியிலிருந்து திரும்பி வந்துவிட்டது என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இது குறித்து அக்கட்சியின் தலைவர் முனீர் கூறுகையில்,‘‘எங்களது கட்சி எப்போதும் கொடுத்த வாக்குறுதியில் உறுதியாக இருக்கும். காசோலை திரும்பி வந்த தகவல் தற்போது தான் கிடைத்துள்ளது. இதுவரை எங்களது கவனத்துக் வரவில்லை’’ என்றார்.

இது குறித்து ராதிகா கூறுகையில்,‘‘ ரோஹித் இறந்தபோது நான் அழுதுக் கொண்டிருந்தேன். பலர் என்னை வந்து சந்தித்து ஆறுதல் கூறிச் சென்றனர். அந்த சமயத்தில் கேரளாவில் இருந்து வந்த அக்கட்சியினர் எங்களை சந்தித்து ஆறுதல் கூறினர். நாங்கள் ஏழ்மை நிலையில் இருப்பதை அவர்கள் உணர்ந்தனர்.
வங்கியில் பணம் இல்லை என்று காசோலை திரும்பவில்லை.

காசோலையில் எழுத்துப் பிழை இருப்பதாக கூறி தான் திரும்பி வந்துள்ளது. அவர்கள் முன் பணமாக ரூ. 5 லட்சத்துக்கு ஒரு காசோலை கொடுத்தனர். ரம்ஜான் முடிந்த பின்னர் ரூ. 10 லட்சம் வழங்குவதாக தெரிவித்தனர். பாஜக.வுக்கு எதிரானவர்களுக்கு நான் பிரச்சாரம் செய்வேன். அதனால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்பாக வெளியான செய்தி உண்மைக்கு புரம்பானது. இதில் அக்கட்சியினர் அரசியல் ஆதாயம் தேடவில்லை’’என்றார்.