திருப்பதியில் 9 நாட்கள் அனுமதி மறுப்பு : ரோஜாவின் சந்தேகம்

திருப்பதி

திருப்பதி கோவிலில் 9 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி மறுப்பது சந்தேகத்தை உண்டாக்குவதாக நடிகையும் சட்டமன்ற உறுப்பினருமான ரோஜா கூறி உள்ளார்.

திருப்பதி கோவிலில் மகா கும்பாபிஷேகத்துக்கான பணிகள் வரும் ஆகஸ்ட் 11 முதல் தொடங்க உள்ளன.   இதை ஒட்டி தேவஸ்தானம் 11 ஆம் தேதியில் இருந்து 9 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவித்துள்ளது.   இது பக்தர்களுக்கு மிகவும் மனத் துயரை உண்டாக்கி உள்ளது.

நடிகையும் சட்டப்பேரவை உறுப்பினருமான ரோஜா செய்தியாளர்களை இன்று சந்தித்தார்.   அப்போது ரோஜா, “ஏற்கனவே திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் அர்ச்சகர் ரமண தீர்த்தலு  சரமாரியாக ஊழல் புகார் தெரிவித்துள்ளார்.  இந்நிலையில் தேவஸ்தானம் 9 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்பது சந்தேகத்தை உண்டாக்குகிறது.

ரமண தீர்த்தலு கூறிய புகார்கள் உண்மையாக இருக்கலாம் எனவே பலருக்கும் தோன்றுகிறது.   இவ்வாறு 9 நாட்கள் கோயிலுக்குள் யாரையும் அனுமதிக்காததின் உண்மையான காரணம் என்ன?  கோயிலை தோண்டி அங்கு புதைக்கப்பட்டுள்ள நகைகளை எடுக்க திட்டம் உள்ளதா?” எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.