பார்சிலோன்: கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளிட்ட சில கால்பந்தாட்ட நட்சத்திரங்கள், கிளப் அணிக்காக, தங்கள் ஊதியத்தை கணிசமான அளவிற்கு விட்டுக்கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளனர்.

தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கிளப் போட்டிகள் ஒத்திவைக்கப்படும் நிலையில் உள்ளன. எனவே, கிளப் நிர்வாகங்கள் எதிர்பாராத நிதி நெருக்கடியை சந்திக்க வேண்டிய நிலைமை.

இந்நிலையில், போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பயிற்சியாளர் மவுரீஸியோ சர்ரி உள்ளிட்ட ஜுவன்ட்டஸ் அணி வீரர்கள், தங்கள் ஊதியத்தில் 90 மில்லியன் யூரோக்களை($100 மில்லியன் டாலர்கள்) தங்கள் ஊதியத்திலிருந்து விட்டுக்கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளனர்.

இத்தாலியன் லீக் போட்டிகளில் மிக அதிக சம்பளம் பெறும் வீரராக இருக்கிறார் கிறிஸ்டியானா ரொனால்டோ. இவர் மட்டுமே தனது பங்காக 10 மில்லியன் யூரோக்களை தனது ஊதியத்திலிருந்து விட்டுத் தருகிறார். இது $11 மில்லியன் டாலர்களுக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜுவன்ட்டஸ் அணியின் கேப்டன் ஜியோர்ஜியோ சிய்யலினி, தனது சக வீரர்கள் மற்றும் கிளப் நிர்வாகத்திற்கிடையே, இதுதொடர்பான பேச்சுவார்த்தையை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.