ரசகுல்லா உரிமை போட்டியில் மேற்கு வங்கம் வென்றது

கொல்கத்தா:

இனிப்பு வகைகளில் ஒன்றான ரசகுல்லா மேற்கு வங்காளத்திற்கு உரியது என புவிசார் குறியீடு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.


ரசகுல்லா யாருக்கு சொந்தம் என்பதில் மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா இடையே போட்டி நிலவி வந்தது. இந்த ரசகுல்லா 1868ம் ஆண்டு மேற்கு வங்காளத்தில் அப்போது கல்கத்தா என அழைக்கப்பட்ட நகரில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.

கொல்கத்தா நகரின் வடக்கு பகுதியை சேர்ந்தவரான நொபின் சந்திர தாஸ் என்பவர் இதனை அறிமுகப்படுத்தினார். பாலில் தயாரிக்கப்படும், வெள்ளை நிறத்தில் பஞ்சு போன்ற மென்மையான இந்த ரசகுல்லாவை நொபினின் வாரிசுகள் இன்றும் வடக்கு கொல்கத்தா நகரில் கடையில் விற்பனை செய்து வருகின்றனர்.

ஒடிசாவின் பூரி நகரில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஜெகன்னாதர் கோயிலில் இறைவனுக்கு தினமும் ரசகுல்லா படைக்கப்படுகிறது. அதனால் ரசகுல்லா தங்களது மாநிலத்திற்கு சொந்தமுடையது என ஒடிசா நீண்ட நாட்களாக கூறி வந்தது. எனவே ரசகுல்லாவிற்கான புவிசார் குறியீடு தங்களுக்கே வழங்க வேண்டும் என்று கூறி மேற்கு வங்காளத்துடன் போட்டி போட்டு வந்தது.
கடந்த 2015ம் ஆண்டில் இருந்து இந்த பிரச்னை தொடர்ந்து வந்த நிலையில் யாருக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் வழங்குவது என்பது முடிவு செய்யப்படாமல் இருந்து வந்தது.

மேற்கு வங்காளத்தில் 2011ம் ஆண்டு மம்தா பானர்ஜி அரசு பொறுப்பேற்ற பின் ரசகுல்லா, சீதாபோக் மற்றும் மிஹிதனா ஆகிய பொருட்களுக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் பெறுவதற்கு முயற்சிகள் எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் மேற்கு வங்காளத்திற்கு ரசகுல்லாவிற்கான புவிசார் குறியீடு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனை மாநில தலைமை செயலக வட்டார தகவல் உறுதிப்படுத்தி உள்ளது.

இதனை அடுத்து லண்டனில் இருந்து பானர்ஜி டுவிட்டர் வழியே வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘நம் அனைவருக்கும் இனிப்பு நிறைந்த செய்தி உள்ளது. மேற்கு வங்காளத்திற்கு ரசகுல்லாவிற்கான புவிசார் குறியீடு அந்தஸ்து கிடைத்துள்ளது அதிக மகிழ்ச்சி மற்றும் பெருமையை அளிக்கிறது’’ என தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி