இந்திய அணியை தேவையின்றி வம்பிழுக்கும் மேற்கிந்திய தீவுகள் பேட்ஸ்மேன்!

ஆண்டிகுவா: இந்திய அணியின் பந்துவீச்சு ஒன்றும் பிரமாதம் இல்லை; சாதாரண பந்துகளுக்கு நாங்கள் விக்கெட்டுகளை விட்டுக்கொடுத்து விட்டோம் என்று தேவையற்ற கருத்தைக் கூறி வம்புக்கு இழுத்துள்ளார் மேற்கிந்திய தீவுகள் பேட்ஸ்மேன் ராஸ்டன் சேஸ்.

ஆண்டிகுவா டெஸ்ட் போட்டியின் 3வது நாள் முடிவில் இந்திய அணி மொத்தம் 260 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. இன்னும் கைவசம் 7 விக்கெட்டுகள் உள்ள நிலையில், மேற்கிந்திய தீவுகளுக்காக இந்திய அணி பெரிய ஸ்கோரை நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கிந்திய தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸில் 222 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் ராஸ்டன் சேஸ் மட்டுமே அதிகபட்சமாக 48 ரன்கள் அடித்தார். ஆனால், அவர்தான் தற்போது தேவையற்ற வகையில் பேசியுள்ளார்.

“இந்திய அணியின் பந்துவீச்சு ஒன்றும் பிரமாதம் இல்லை. நாங்கள்தான் சாதாரண பந்துகளுக்கு தேவையில்லாமல் விக்கெட்டுகளை விட்டுக்கொடுத்து விட்டோம். என்னால் எவ்வளவு தூரம் முடியுமோ, அவ்வளவு தூரம் நின்று ஆடினேன். ஆனால், கவனக்குறைவால் விக்கெட்டை இழந்துவிட்டேன்.

நேராக வீசப்பட்ட பந்தை என் அருகில் வரும்வரை காத்திருந்து அடிக்காமல், அவசரப்பட்டு விட்டேன். அதுதான் நான் செய்த தவறு. பிட்ச் கண்டிஷனை எங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை” என்றுள்ளார்.

இந்த ரோஸ்டன் சேஸ் இஷாந்த் ஷர்மாவிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.