டில்லி:
வங்கி பண மோசடி வழக்கில் ரோட்டோமேக் பேனா நிறுவன அதிபர் விக்ரம் கோத்தாரி மற்றும் அவரது மகன் ராகுலை சிபிஐ இன்று கைது செய்துள்ளது.

பொதுத் துறை வங்கிகளில் 3 ஆயிரத்து 695 கோடி ரூபாயை மோசடி செய்ததாக இவர்கள் இருவர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. சில தினங்களாக கோத்தாரியிடம் மோசடி தொடர்பாக சிபிஐ தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தது. 7 வங்கிகளிடம் 2 ஆயிரத்து 919 கோடி ரூபாய் கடன் பெற்று ரோட்டோமேக் நிறுவனம் மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதில் வட்டி சேர்க்கப்படவில்லை

கடன் பெற்ற வங்கிகள் விபரம்….

பேங்க் ஆப் இந்தியா ரூ. 754.77 கோடி, பேங்க் ஆப் பரோடா ரூ.456.63 கோடி, ஐஒபி ரூ.771.07 கோடி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா ரூ. 458.95 கோடி, அலகாபாத் வங்கி ரூ.330.68 கோடி, பேங்க் ஆப் மகாராஷ்டிரா ரூ.49.82 கோடி, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் ரூ.97.47 கோடி கடன் பெறப்பட்டுள்ளது.

கோத்தாரி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது. முன்னதாக கோத்தாரி மற்றும் அவரது குடும்பத்தார் நாட்டை விட்டு வெளியேற முடியாத வகையில் அமலாக்கத் துறையினர் விமான நிலையம், துறைமுகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பினர். குடியேற்ற பிரிவுக்கு சிபிஐ லுக்அவுட் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

முன்னதாக கோத்தாரி நாட்டை விட்டு ஓடி விட்டதாக செய்திகள் வெளியானது. இதை மறுத்த கோத்தாரி, தான் கான்பூரில் உள்ள வீட்டில் தான் இருப்பதாகவும், தொழில் நிமித்தமாக தான் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ததாகவும் தெரிவித்திருந்தார்.