எச்.ராஜா பேச்சு குறித்து இயக்குநர் விசு என்ன நினைக்கிறார்?
பா.ஜ.க. தேசிய செயலாளரு எச்ராஜா போலீசையும், உயர்நீதிமன்றத்தையும் கேவலமா பேசிய(தா) வெளியான வீடியோதானே இப்போ வைரலாயிட்டிருக்கு… உடனே எனக்கு ஒரு ஐடியா வந்துச்சு.
“அடேய்.. ரவுண்ட்ஸ்பாய்.. உன்னை ஆபீஸ் பாய்னு ஆளாளுக்கு வேலை வாங்கறாங்களே.. எச்.ராஜாவை வைச்சு ஒரு பரபரபரபரப்பா (எத்தனை பரபர?) ஒரு பேட்டி எடுத்து எல்லாரையும் காதுல விரலை வைக்க வைடா”ன்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டேன்.
ஆனா அதுக்குள்ள எச்.ராஜாவே (வழக்கம்போல) “எனக்கு பதிலா அந்த வீடியோல யாரோ டப்பிங், எடிட்டிங் பண்ணி பேசிட்டாங்க”ன்னு சொல்லிட்டாரு.
ஆனாலும் அந்த பரபரப்பு குறையலயே..
என்ன செய்யலாம்னு யோசிச்சப்பதான், எச்.ராஜாவோட ஆயிரமாவது இளம் சிஷ்யர் நினைவுக்கு வந்தாரு. .
அதாங்க சினிமா டைரக்டரு விச்சு!
அவர்தானே, “இந்து மதத்தை மீட்டெடுக்க கடவுளால் அனுப்பப்பட்ட தூதர் எச்.ராஜா. ஆண்மகனைப் பார்த்து ரொம்ப வருஷமாச்சு. இப்போது ராஜாவத்தான் அப்படியொரு ஆண்மகனாக பார்க்குறேன். ஆயிரம் இளைஞ்சர்களை ராஜாவுக்குக் கொடுங்க.. இந்து மதத்தையும் இந்துக்களையும் அவர் காப்பாத்திடுவாருன்னு பேசினாங்க. 999 இளைஞர்களைக் கொடுத்தா போதும். மீதமுள்ள ஒரு இளைஞனா ராஜாவின் பின்னால நான் நிக்குறேன்”னு உணர்ச்சி பொங்க பேசினாரு.
அதனால எச்.ராஜா பேசிய(தா!) வெளியான வீடியோ பத்தி விச்சு சாரோட கருத்தை தெரிஞ்சி பத்திரிகையில வெளியிடலாமேன்னு நினைச்சேன்.
அவரு நம்பருக்கு போன் போட்டேன். நாலஞ்சு தடவை ரிங் ஆகியும் யாரும் எடுக்கலை.
“விடா முயற்சி விஸ்வரூப வெற்றி”ன்னு கமல் சார் சொன்னது நினைவுக்கு வந்துச்சு. அதனால மறுபடி மறுபடி போன் பண்ணேன்.
அப்பாடா… ஒருவழியா போன் எடுக்கப்பட்டுச்சு.

எடுத்தவரு விச்சு சாரோட மனைவி.
“யாரு வேணும்”னு கேட்டாங்க.
“விச்சு சார்கிட்ட பேசணும்”
“என்ன விசயமா பேசணும்?”
“ம்… அவர்ட்ட பேசி ரொம்ப நாளாச்சு.. ஒரு பேட்டிக்காகத்தான்!”
“என்ன விசயமான்னு சொல்லுங்க…”.
“பொதுவாகத்தான்…”
“பொதுவான்னா… என்ன விசயமான்னு சொல்லுங்க..!”
“ம்….”
“எச்.ராஜா பேச்சு பத்தின விசயமா இருந்தா வேண்டாம்னு சொல்லச் சொன்னார்..”
“அடப்பாவமே.. சரி... விச்சு சார் இப்போ என்ன பண்றார்”ன்னு கேட்டேன்.
“தூங்கிட்டிருக்கார்”
சரின்னு போனை வச்சுட்டேன்.
எச்.ராஜாவை தேவதூதன்னு சொன்னப்போ விசு பேசின இன்னும் சில உரைவீச்சுங்க நினைவுக்கு வந்துச்சு:
“ கடந்த 22 வருடங்களுக்கும் மேலாக, அரட்டை அரங்கத்துக்காகவும் மக்கள் அரங்கத்துக்காகவும் நிறைய ஊர்களுக்கு, சென்றிருக்கிறேன். அவற்றின் மூலமாக, ஏராளமான பேச்சாளர்களைக் கண்டெடுத்திருக்கிறேன். அவர்களில் பலரும் ராஜாவுக்குப் பின்னே அணி திரண்டு நிற்பார்கள் என்பதை உறுதியாகச் சொல்லிக் கொள்கிறேன்”ன்னு சொன்ன விச்சு சார், “கூடங்குளம் உதயகுமார், நான் பேசிய ஒரு பேச்சுக்காக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், சைபர் க்ரைமில் புகார் கொடுத்திருக்கார். நான் இதுவரை ஜெயில் சாப்பாடே சாப்பிட்டதில்லை. வாரத்துக்கு செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாட்கள் வீதம், வாரத்துக்கு மூன்று முறை டயாலிசிஸ் செய்யவேண்டும். உதயகுமாரனுக்கு நான் வைக்கும் கோரிக்கை, என்னை எப்படியாவது ஜெயிலில் போடுங்கள். டயாலிசிஸ் செய்வதற்கு போலீஸ் ஜீப்பில் சென்றுவரலாம். எனக்குத் துணையாக என் மனைவியும் வருவார். ஆக எங்களுக்குச் செலவு மிச்சம்” – அப்பின்னு விச்சு சார் பேசினது நினைவுக்கு வந்துச்சு.
பின்குறிப்பு: தூங்கறது மூலமா, குறியீடா ஏதோ விச்சு சார் சொல்லவர்றார்.. அது என்னவா இருக்கும்?