அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி பினு கைது

சென்னை:

அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி பினுவை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் பிரபல ரவுடி பினு. இவர் மீது கொலை, ஆள் கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கடந்தாண்டு பிப்ரவரி மாதம் மாங்காடு அடுத்த வடக்கு மலையம்பாக்கத்தில் ரவுடி பினு தனது கூட்டாளிகளுடன் அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார்.

இதனை அறிந்த போலீசார் அப்பகுதியை சுற்றி வளைத்து 75 ரவுடிகளை ஒரே நேரத்தில் கைது செய்தனர். அப்போது ரவுடி பினு தப்பி ஓடிவிட்டார். அவர், அரிவாளால் கேக் வெட்டும் புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீசாரின் என்கவுண்டர் பீதியால் அவர் கடந்த ஆண்டு பிப்ரவரி 13-ந்தேதி அம்பத்தூர் போலீஸ் இணை கமி‌ஷனர் அலுவலகத்தில் போலீசார் முன்னிலையில் சரண் அடைந்தார்.

விசாரணைக்கு பின்னர் பினுவை புழல் சிறையில் அடைத்தனர். அங்குள்ள மற்ற ரவுடிகளால் பினுவுக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் வேலூர் சிறைக்கு அதிகாரிகள் மாற்றினர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூன் 23-ம் தேதி பினுவுக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்தது. 30 நாட்கள் மாங்காடு போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

ஆனால் ஜாமீனில் வந்த பினு அதன் பின்னர் மாங்காடு போலீஸ் நிலையத்துக்கு கையெழுத்திட வரவில்லை. தலைமறைவாகி விட்டது தெரிந்தது.

இதனையடுத்து, பினுவை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், சென்னை எழும்பூரில் வைத்து ரவுடி பினு மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் சுற்றி வளைத்து மீண்டும் கைது செய்தனர். அப்போது போலீஸ் பிடியில் இருந்து பினு தப்பினார்.

இதனையடுத்து, பினுக்கு எதிராக நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இது தொடர்பாக தனிப்படை போலீசார் பினுவை தேடி வந்தனர்.  இந்நிலையில் சென்னை கொளத்தூரில் பதுங்கியிருந்த பினுவை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published.