ராயல்டி விவகாரம்: இளையராஜா மீது படத்தயாரிப்பாளர்கள் வழக்கு

சென்னை:

தான் இசை அமைத்துள்ள பாடல்களை பாட கட்டணம் கேட்கும் இளையராஜாவின் நடவடிக் கைக்கு நாடு முழுவதும் உள்ள இசை ரசிகர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இந்த நிலையில், இளையராஜா மீது படத்தயாரிப்பாளர்கள் சென்னைஉயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில், படத்தயாரிப்பாளருக்கே பாடலுக்கான உரிமை உள்ளது என்றும், இளையராஜா பெறும் ராயல்டி பணத்தில் 50சதவிகிதம் தயாரிப்பாளருக்கு தர வேண்டும் என்று கூறி உள்ளனர்.

இதுகுறித்து  தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் தலைமையில் 6 பேர் கொண்ட குழு இளையராஜா மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில்,

இசையமைப்பாளர் இளையராஜா ராயல்டி தொகை முழுவதும் தனக்கே கிடைக்க வேண்டுமென அவர் உரிமைக் கொண்டாடி வருகிறார். இதனால் தயாரிப்பாளர்களுக்கு வருவாய் கிடைப்பது இல்லை. கச்சேரிகளில் இளையராஜாவுக்கு வரும் தொகையில் 50% தயயாரிப்பாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இளையராஜா பரிந்துரையின்படி பல தயாரிப்பாளர்கள் தங்களது ஆடியோ உரிமையை எக்கோ கம்பெனிக்கு வழங்கினர். அதில் வரும் ராயல்டி 50 சதவிகித பங்கு இதுவரை எந்த தயாரிப்பாளர்களுக்கும் முறையாக வந்ததில்லை. இனி வரும் காலங்களில், பாடல்களின் மூலம் வரும் வருவாய் 25 லட்சம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருமானம் தயாரிப் பாளர்களுக்கு வர வேண்டும் .

ஒரு படத்தின் பாடல்கள் அந்த படத்தை தயாரிக்கும் படத்தயாரிப்பாளர்களை சாருமே தவிர, சம்பளம் வாங்கி இசையமைத்த இளையராஜாவுக்கு சேராது. இதுவரை சுமார் 200 கோடிக்கு மேல் தயாரிப்பாளர்களுக்கு வரவேண்டிய ராயல்டி பணம் ஏமாற்றப்பட்டிருக்கிறது. இதை இளையராஜாவிடம் இருந்த வாங்கி தர வேண்டும் என்றும் கூறி உள்ளனர்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது.