ஈ- பாஸ் இல்லாத வணடியில் ஒரு கோடி ரூபாய்…

குரங்கு பிடிக்கப் பிள்ளையார் (?) ஆன கதை என்பார்களே அப்படித்தான் நடந்திருக்கிறது சென்னை போலீசாருக்கு

முத்தியால்பேட்டை போலீசார் தகுந்த ஈ-பாஸ் இல்லாத வாகன ஓட்டிகளை நிறுத்தி சோதனை செய்த போது, மன்னடியைச்சேர்ந்த 35 வயது நாதர் சாகிப் என்பவரையும் ஜூல்ஸ் ரோடு – பிரகாசம் சாலை சந்திப்பில் வைத்து ஆவணங்களைக் கேட்டுள்ளனர்.

இவரிடம் தகுந்த ஈ-பாஸ் இல்லாத காரணத்தினால் இவர் வாகனத்தைச் சோதனை செய்தனர்.  அப்போது வண்டியில் ரூ. 99.5 லட்சம் ரூபாய் இருந்ததைப் பார்த்து அது பற்றி அவரிடம் விசாரித்தனர்.  ஆனால் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்ததால் உடனடியாக இவரைக் காவல்நிலையம் அழைத்துச்சென்றுள்ளனர்.

அங்கே நடத்திய விசாரணையில் சாகிப், ரியல் எஸ்டேட் தொழில்புரியும் பவளக்காரத்தெருவைச் சேர்ந்த இர்பான் என்பவர் கேட்டுக்கொண்டபடி, தையூவாப்பா முதலி தெருவில் காத்திருந்து அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கொடுத்த பணத்தை இர்பானிடம் ஒப்படைக்க எடுத்துச்சென்றதாகவும், அது தவிர தனக்கு வேறு ஏதும் தெரியாது என்று சொல்லியிருக்கிறார். இதைத்தொடர்ந்து, கணக்கில் வராத இந்த பணத்தையும், சாகிப்பையும் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்க உள்ளனர் போலீசார்.

– லெட்சுமி பிரியா