ரூ.1கோடி கேட்டு மிரட்டல்: திமுக எம்எல்ஏ சேகர்பாபு மீது வழக்கு பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை:

நிலம் தொடர்பான பிரச்சினை காரணமாக ரூ.1 கோடி கேட்டு மிரட்டியதாக மனுதாரர் தொடர்ந்த  வழக்கு காரணமாக,  நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சேகர்பாபு மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

வடசென்னை  பகுதியான சவுகார்பேட்டை பகுதியில் உள்ள  தங்க சாலை தெருவில் உள்ள நிலம் தொடர்பாக சூளைமேடு பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் மற்றும் கண்பத்லால் ஆகிய இரு தரப்பின ருக்கு பிரச்சினை ஏற்பட்ட நிலையில், திமுக எம்.எல்.ஏ சேகர் பாபு கண்பத்லாலுக்கு ஆதரவாக களமிறங்கியதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, சூளைமேடு ராஜ்குமாரை மிரட்டிய சேகர்பாபு எம்எல்ஏ, நிலத்தை கண்பத்லா லுக்கு கொடுக்க வேண்டும் என்றும், தனக்கும் ரூ.1 கோடி தர வேண்டும் என்று மிரட்டியதாக காவல் நிலையித்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால், காவல்துறையினர் அவரது புகாரை ஏற்க மறுத்த நிலையில், சேகர்பாபு  தன்னை பணம் கேட்டு மிரட்டியதாக ராஜ்குமார் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சேகர்பாபு மற்றும் திமுக வழக்கறிஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு யானைக்கவுனி காவல்துறைக்கு உத்தரவிட்டனர். அதையடுத்து, சேகர்பாபு உள்பட அவருக்கு ஆதரவாளர்கள் மீது,  மிரட்டல் மற்றும் பணம் பறித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனை எதிர்த்து, சேகர்பாபு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில், அரசு தரப்பில் ஆஜாரான வழக்கறிஞர், சேகர் பாபு மற்றும் திமுக வழக்கறிஞர்கள் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அதனைக் கேட்டுக் கொண்ட நீதிபதிகள், நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் வரை காவல்துறை இதில் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றும் வழக்கறிஞர்கள் மீதான வழக்கை பிரத்தியேக சிறப்பு அமர்வு விசாரிக்கும் என்றும் உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 3ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.