திமுக ஆட்சியின்போது ரூ.1லட்சம் கோடி கடன்! எடப்பாடி தகவல்

கோவை:

திமுக ஆட்சியின்போது ரூ.1லட்சம் கோடி கடன் வைத்திருந்தது என்று தமிழக முதல்வர் எடப்பாடி குற்றம் சாட்டி உள்ளார். இப்போது வெள்ளை அறிக்கை கோரும் ஸ்டாலின் அப்போது எங்கே சென்றார் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஜெ.பிறந்தநாளையொட்டி, சென்னையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு திட்டங்களை தொடங்கி வைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விமானம் மூலம் கோவை புறப்பட்டுச் சென்றார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தவர், செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தவர், ஊடகம் தங்களுக்கும், அரசின் நலத்திட்டங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.

அவர் கூறியதாவது,  ஜெயலலிதா பிறந்த நாளை  பெண்கள் பாதுகாப்பு தினமாக அறிவிக்கப்பட்டதைத்தொடர்ந்து,   இன்று நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் பெண்கள் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, வலியுறுத்திய நிலையில், தமிழகம் அதை நிறைவேற்றி வருகிறது.

‘தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின்படி, பெண்களுக்குப் பாதுகாப்பான நகரங்களில் கோவை முதலிடத்திலும், பெருநகரங்களில் சென்னை முதலிடத்திலும் உள்ளது. தமிழகத்தில் பெண்கள் இரவு நேரங்களில் கூட சாலைகளில் செல்லும் பாதுகாப்பான நிலையை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். குற்றங்களைக் குறைப்பதற்காக ஆங்காங்கே நகரில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசியவர், மு.க.ஸ்டாலின் குறித்து கடுமையாக விமர்சித்தார். பெண்கள் பாதுகாப்பு திட்டத்தை குறைகூற ஸ்டாலினுக்கு அறுகதை இல்லை என்றவர், கனவில்தான் இருக்கிறார். மு.க. ஸ்டாலின் முதல்வர் கனவில் இருக்கிறார், அவர் என்ன ஆட்சிக்கு வரப்போகிறாரா? நாங்கள்  மக்களுக்கு நல்லது செய்கிறோம். மனமிருந்தால் அதனை ஏற்கட்டும். அவருக்கு அதை ஏற்க மனம் இல்லை. நல்ல திட்டங்கள் அறிவிக்கப்படுவதால், அதனைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், எரிச்சலில் வரும் வார்த்தைகள்தான் அவை என்று கடுமையாக சாடினார்.

அப்போது செய்தியாளர்களின்  சிஏஏ-க்கு எதிரான போராட்டம் குறித்த கேள்விக்கு,  ஏற்கனவே சட்டப்பேரவையில் இதுகுறித்துத் . நானும் வருவாய்த் துறை அமைச்சரும் தெளிவுபடுத்தியிருக்கிறோம். தமிழகத்தைப் பொறுத்த வரையில் எந்த சிறுபான்மையின மக்களும் அச்சப்படத் தேவையில்லை. மக்கள்தொகை கணக்கெடுப்பு, என்பிஆர் ஆகிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள உள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டு களுக்கு ஒருமுறை எடுக்கப்படுவது. என்பிஆரும் அப்படித்தான்.

2003-ம் ஆண்டு திமுக மத்தியில் ஆட்சியில் அங்கம் வகித்த போதுதான் என்பிஆர் என்ற நடைமுறையைக் கொண்டு வந்தனர். இந்தச் சட்டத்தை இயற்றினர். 2010 காங்கிரஸ் ஆட்சியில் அது இந்தியா முழுவதும் நடை முறைப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் 2011, பிப்ரவரி மாதம் திமுக ஆட்சியில் இருக்கும் போதுதான் முதன்முறையாக என்பிஆர் கணக்கெடுப்பைத் தொடங்கி வைத்தனர் என்று கூறியவர்,

இன்றைய இந்த ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும்,  வேண்டுமென்றே திட்டமிட்டு, இடையூறு செய்ய வேண்டும் என்பதற்காகவும் அரசியல் லாபத்திற்காகவும் சிறுபான்மையின மக்களிடத்தில் ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தும் விதமாக தவறான, பொய்யான செய்திகளை எதிர்க்கட்சியினர்  பரப்பி வருகின்றனர் என்று குற்றம் சாட்டினார்.

இது ஜனநாயக நாடு, அனைவருக்கும் போராட்டம் நடத்த உரிமை உண்டு. போராட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கிறது. யாருடைய போராட்டங்களையும் தடை செய்யவில்லை. யார் போராடுகின்றனர் என்பது ஊடகங்களுக்குத் தெரியும்.

தாழ்த்தப்பட்டவர்களை நீதிபதிகளாக்கியது திமுக போட்ட பிச்சை என அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியிருக்கிறார். தரக்குறைவான வார்த்தையைப் பேசியிருக்கிறார். ஆணவத்தில் பேசியிருக்கிறார். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை இப்படிப் பேசுவது சரியா? என கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தில் கடன் சுமை அதிகரித்து உள்ளது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தமிகத்தில் திமுக ஆட்சியில் இருந்து இறங்கும்போது ரூ.1 லட்சம் கோடி கடன் இருந்தது. அன்றைய மதிப்புக்கு ரூ.1 லட்சம் கோடி என்றால், இன்றைய நிலைக்கு அதன் மதிப்பைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். அவர்கள் பத்தாண்டுகளுக்கு முன் வைத்த கடனுக்கு நாங்கள் தொடர்ந்து வட்டி கட்டிக் கொண்டிருக்கிறோம். பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்காக நிதி செலவிடப்படுகிறது. இதனால் இன்று கடன் தொகை உயர்ந்திருக்கிறது.

அதுபோல, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் தமிழக அரசு தீர்மானம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆளுநர்தான் இறுதி முடிவெடுக்க வேண்டும். மாநில அரசுக்கு உண்டான அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம் என்றவர்  எழுவர் விடுதலை குறித்துக் கேட்பதற்கு இவர்களுக்குத் தகுதியில்லை.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி கூறினார்.