சென்னை

மிழகத்தில் கிராமப்புறங்களில் பழங்குடியினர் மற்றும் தலித் வசிக்கும் பகுதிகளில் உள்ள 1000 கோவில்கள் புனரமைப்புக்கு அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

தமிழகத்தில் பல கிராமங்களில் தலித்துகள் மற்றும் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள பல கோவில்கள் பாழடைந்து கிடக்கின்றன. இவற்றைப் புனரமைக்க அப்பகுதி மக்கள் பல முறை அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தகவல் அளித்துள்ளார்.

முதல்வர்,”தமிழகத்தில் கிராமப்புறங்களில் குறிப்பாக தலித் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் கவனிப்பாரற்று உள்ள 1000 கோவில்கள் தேர்வு செய்யப்பட்டு புனரமைப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதற்காக அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஒவ்வொரு கோவிலுக்கும் ரூ. 1 லட்சம் வீதம் புனரமைப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கைத்தறி நெசவாளர்களுக்கான அகவிலைப்படி 10% உயர்த்தப்பட உள்ளது. இதனால் 1137 நெசவாளர் சங்கத்தில் உள்ள 2 லட்சம் கைத்தறி நெசவாளர்கள் பயன் பெறுவார்கள். அத்துடன் பொங்கலை முன்னிட்டு அரசு சார்பில் ஏழைகளுக்கு வழங்கப்படும் வேட்டி மற்றும் சேலையின் நெசவுக் கூலி அதிகரிக்கப்பட உள்ளது. சேலைக்கு ரூ.39.27லிருந்து ரூ.43 ஆகவும் வேட்டிக்கு ரு 21.60 லிருந்து ரூ. 24 ஆகவும் இனி வழங்கப்படும்.

இதைப் போல விசைத்தறி நெசவாளர்களுக்கு பள்ளி சீருடைக்கான துணிகளுக்கான நெசவுக்கூலி மீட்டருக்கு ரூ.11.32 ஆக இருந்தது இனி ரு. 12.16 ஆக வழங்கப்படும். நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வட்டி மானியம் ரு. 14.40லிருந்து ரூ. 21.60 கோடியாக உயர்த்தப்பட உள்ளது” என தெரிவித்துள்ளார்.