டிகர் விஜய்யை வைத்து படம் எடுப்பதாகக் கூறி ரூ. 10 லட்சம் மோசடி செய்துவிட்டதாக  மும்பையைச் சேர்ந்த இருவர் மீது, மதுரையைச் சேர்ந்த செல்வபாண்டியன் என்பவர் சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

மதுரை புதுவில்லாங்குடியில் வசிப்பவர் செல்வபாண்டியன். அவர் இன்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

“நான் மதுரையில் ஃபைனான்ஸ் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறேன். மும்பையில் வசிக்கும் குருசாமி – செம்மலர் தம்பதிக்குச் சொந்தமான  கட்டிடத்தில் ஒத்திக்கு எடுத்து அலுவலகம் வைத்திருக்கிறேன்.

இந்த நிலையில் குருசாமி  – செம்மலர் தம்பதிகள் நடிகர் விஜய்யை வைத்து படம் எடுக்க இருப்பதாகவும் அதில் பார்ட்டனராக சேரும்படியும் என்னிடம் வற்புறுத்தினார்கள். இதையடுத்து  ஒப்புக்கொண்ட நான் பத்து லட்ச ரூபாயை வங்கிக் கணக்கு மூலம் அவர்களுக்கு அனுப்பினேன். பிறகு திரைப்பட இயக்குநர் பாலமித்திரன் என்பவர் வீட்டில் கதை விவாதம் நடந்தபோதும் கலந்துகொண்டேன்.

இந்த நிலையில் மும்பை போலீசார், மதுரையில் உள்ள எனது அலுவலகத்துக்கு வந்தனர். சஜ்ஜன் போஜ்பால் என்ற தீவிரவாதியுடன் குருசாமிக்குக்கு தொடர்பு இருப்பதாகவும் அதனால் தேடி வந்ததாகவும் தெரிவித்தார்கள்.

இதனால் பயந்துபோன நான், படத் தயாரிப்பு விவகாரத்தில் இருந்து விலகுவதாகச் சொல்லி நான் கொடுத்த பத்து லட்ச ரூபாய் பணத்தைத் திருப்பித்தரும்படி குருசாமியிடம் பிறகு கேட்டேன்.

அதற்கு குருசாமி அவர் மனைவி செம்மலர் மற்றும் இயக்குநர் பாலமித்திரன் ஆகியோர், பயங்கரவாதிகள் மூலம் விஜய்யை மிரட்டி படத்தில் நடிக்க வைத்துவிடுவோம் கவலை வேண்டாம் என்றார்கள்.

அவர்களோ  நான் பணத்தைக் கேட்கக்கூடாது என்றும் கேட்டால் மும்பை பயங்கரவாதிகள் மூலம் என்னை அழித்துவிடுவோம் என்றும் மிரட்டினார்கள்.

இதற்கிடையே என் மதுரை அலுவலகத்தை உடைத்து பணம் மற்றும் ஆவணங்களை எடுத்துச்சென்றுவிட்டனர்” – இவ்வாறு செல்வபாண்டியன் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.