சென்னை: கேரள மாநிலம் மூணாறு அருகே ஏற்பட்ட  நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணத் தொகையை  ரூ.10லட்சம்  ஆக உயர்த்தி  வழங்க வேண்டும் என ஐஎன்ஆர்எல்எஃப் மாநில தலைவர் இராம. கர்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இடுக்கி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இடுக்கி மாவட்டத்தில் உள்ள  ஏராளமான தேயிலை  தோட்டங் களில் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் தென்மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்களும் வேலை செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில், மூணாறில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராஜமலை பெட்டிமுடி பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பு அருகே நேற்று அதிகாலை 5 மணி அளவில் திடீரென்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி 20-க்கும் மேற்பட்ட வீடுகள் நாசமாயின். அந்த வீடுகள் அப்படியே மண்ணுக்குள் புதைந்தன. இந்த கோர விபத்தில், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த  78 பேர் உயிரோடு மண்ணுக்குள் புதைந்தனர்.  இதுபற்றிய தகவல் அறிந்ததும் எர்ணாகுளம், மறையூர் தீயணைப்பு படையினர், பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று மண்ணுக்குள் புதைந்த தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில்,  ஒரு சிறுவன் உள்பட 17 பேர் உயிரோடு மண்ணில் புதைந்து பலியாகி இருப்பது தெரியவந்தது.  அவர்கள்  அனைவரும் தென்காசி மாவட்டம் புளியங்குடி, சங்கரன்கோவில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்தது. மேலும் நிலச்சரிவில் சிக்கிய 16 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக கோலாஞ்சேரி, மூணாறில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீதம் உள்ள 42 பேரின் கதி என்ன? என்று தெரியவில்லை. அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலச்சரிவு சம்பவம் பற்றி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய போலீஸ் ஐ.ஜி.அஜித்லாலுக்கு கேரள அரசு உத்தரவிட்டு உள்ளது. அத்துடன்  மாநில முதல்வர் பினராயி விஜயன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்க நிவாரண நிதியாக தலா 5 லட்சம் ரூபாயை அறிவித்துள்ளார். அதுபோல, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், இறந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டு உள்ளது.
இந்த நிலையில், மூணாறு ராஜமலை  நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை  ரூ.10லட்சம்  ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என இந்திய தேசிய கிராம தொழிலாளர் சம்மேளனம்,  மாநிலத் தலைவர் வாழப்பாடி இரா கர்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரள மாநிலம், மூணாறு அருகே ராஜமலை யில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் 17 பேர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவில் சிக்கிய 15 பேர் மீட்கப்பட்ட நிலையில் காணாமல் போனமேலும் 80 பேரை தேடி வருகின்றனர். இறந்த தொழிலாளர்களுக்கு இந்திய தேசிய கிராம தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பாக எங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்,  மேலும் காயமடைந்தோர் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் இறைவனை பிரார்த்திக்கிறோம்.
இந்த நிலச்சரிவில் மீட்கப்படாத தொழிலாளர்கள் கேரள அரசு விரைந்து அவர்களை மீட்க வேண்டும் என்றும் இந்திய தேசிய கிராம தொழிலாளர் சம்மேளனம் கேட்டுக் கொள்கிறது.
கேரள நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடுமபத்துக்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தலா 5 லட்சம் ரூபாயை அறிவித்துள்ளார். கேரள அரசு அவர்களுக்கு கொடுக்கின்ற நிவாரணத் தொகையை 10 லட்ச ரூபாயாக உயர்த்தி கொடுக்கவேண்டும்.
அதேபோல் மழைக்காலங்களில் அவர்களுடைய வேலைக்கு விடுமுறைக் காலமாக அறிவித்து அவர்களுக்கு அந்த காலத்திற்கான நிவாரணத் தொகையை கேரள அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எங்களது சங்கத்தின் சார்பாக கேரள அரசுக்கு வேண்டுகோளாக வைக்கின்றோம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.