ஊராட்சி பதவிக்கு ரூ.10 லட்சம்: திமுக முன்னாள் எம்எல்ஏ சுப்பையா கட்சியில் இருந்து நீக்கம்!

புதுக்கோட்டை:

ராட்சி உறுப்பினர் பதவிக்கு ரூ.10 லட்சம் கேட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, முன்னாள் திமுக எம்எல்ஏ சுப்பையா மற்றும் அவரது மகன் திமுகவில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். திமுக தலைமை இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 27 மற்றும் 30-ந்தேதிகளில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, வேட்புமனுத் தாக்கலும் முடிவடைந்துள்ளது.

இந்த நிலையில், உள்ளாட்சி பதவிகள் ஏலம் விடப்பட்டு, தேர்வு செய்யப்படும் அவலமும் நடைபெற்று வருகிறது. பல இடங்களில், அந்த பகுதியைச் சேர்ந்த அரசியல் பிரபலங்கள் தங்களது கட்சியினரை எதிர்த்து யாரையும் போட்டியிட விடாதவாறு மிரட்டல் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.

இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அதையும் மீறி பல இடங்களில் , பல பதவிகள் அந்த பகுதி கட்சித்தலைவர்களின் ஆதரவுடன் விலை பேசப்பட்டு, போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படும் நிலை உருவாகி வருகிறது.

இந்த நிலையில்,  புதுக்கோட்டை திருமயம் பகுதியில் ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட  ரூ.10 லட்சம் கேட்பதாக, முன்னாள் திமுக எம்எல்ஏ மீது புகார் கூறப்பட்டது.

இந்த புகார் குறித்து விசாரணை நடத்திய திமுக தலைவர், திமுக முன்னாள் எம்எல்ஏ ஆலவயல் சுப்பையா, அவரது மகன் முரளிதரன் ஆகியோரை  திமுகவில் இருந்து நீக்கி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.