ரூ.100 கோடி சேதம்: சபரிமலை அய்யப்பன் கோவில் தரிசன அனுமதி காலவரையின்றி ரத்து

பம்பை:

வரலாறு காணாத வெள்ளப்பாதிப்பில் சிக்கி உள்ள  சபரிமலை கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 100 கோடி ரூபாய் அளவுக்கு  சேதம் ஏற்பட்டுள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சபரிமலை அய்யப்பன் கோவில் கால வரையின்றி மூடப்படுவதாகவும், பக்தர்களின் அனுமதி ரத்து செய்யப்படுவதாகவும்  தேவசம் போர்டு அறிவித்து உள்ளது.

கேரளாவில் ஏற்பட்டுள்ள கனமழை மற்றும் பெரும் வெள்ளம் காரணமாக  சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்களுக்கான அனுமதி காலவரையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள சேதங்கள் சீரமைக்கப்பட்ட  பின்னரே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

கேரள வெள்ளத்தில், அய்யப்பன் கோவிலுக்கு அருகில் ஓடும் பம்பை ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால், அய்யப்பன் கோவிலுக்கு யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது மழை ஓய்ந்து, வெள்ளம் குறைந்துள்ளது. இந்த நிலையில், அய்யப்பன் கோவில் அமைந்துள்ள பம்பை ஆற்றுப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் உள்பட பல பகுதிகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

சபரிமலை அடிவாரத்தில்  உள்ள திரிவேணி சங்கமத்தில் பல அடி உயரத்திற்கு சேறும், சகதியும் மட்டுமே உள்ளது. பம்பை ஆற்றை பக்தர்கள் கடக்க அமைக்கப்பட்ட இரு பாலங்கள் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டுள்ளது. ஆறு முன்பு ஓடிய இடத்தில் இருந்து 50 மீட்டர் விலகி பாய்கிறது.

பம்பை ஆற்றங்கரையில் பக்தர்கள் தங்கும்  ராமமூர்த்தி மண்டபம், பக்தர்களுக்கான குளியல் அறைகள், திரிவேணி வாகன நிறுத்தம் இடம் என, ஆற்றங்கரையில் இருந்த கட்டிடங்கள் போன்றவை ஆற்றின் வெள்ளத்தால் சிதைந்து உடைந்து உள்ளது. இதை கணக்கெடுத்த அதிகாரிகள், சுமார் 100 கோடி ரூபாய் அளவுக்கு சேதத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து. சேதங்களை சரி செய்த பின்னரே கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்றும், அதுவரை தரிசனத்திற்கான அனுமதி காலவரையின்றி ரத்து செய்யப்படும். ஆனால், வழக்கமான பூஜைகள் நடைபெறும் என்றும்  திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் கூறி உள்ளார்.