போலி வே பில் மூலம் ரூ. 100 கோடி ஜிஎஸ்டி மோசடி

கமதாபாத்

போலியான இ வே பில் அளித்து ஒரு நிறுவனம் ரூ.100 கோடி ஜி எஸ் டி மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இ வே பில் என்பது ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கும் மின்னணு சீட்டாகும். கடந்த 2018 ஏப்ரல் 1 முதல் இவ்வாறு இ வே பில் பெறுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

இந்த வே பில் பெற ஜிஎஸ்டியில். பதிவு எண் பெற்றிருக்க வேண்டும். ரூ. 50000 க்கு குறைவான பொருட்களை எடுத்துச் செல்லும் போது இ வே பில் தேவை இல்லை.

குஜராத் மாநில ஜிஎஸ்டி அதிகாரிகள் சமீபத்தில் கட்ச் பகுதியில் பல நிறுவனங்களில் சோதனை நிகழ்த்தினார்கள். இவ்வாறு சோதனை இடப்பட்ட 49 நிறுவனங்களில் மே ஏர் எண்டர்பிரைசஸ் என்னும் நிறுவனமும் ஒன்றாகும். இந்த நிறுவனத்தின் இ வே பில்கள் குறித்து சந்தேகம் எழுந்ததால் அனைத்து கணக்குகளையும் அதிகாரிகள் ஆரய்ந்தனர்.

அப்போது இந்த நிறுவனம் ஒரே முகவரியில் 8 நிறுவனங்களை பதிவு செய்துள்ளது கண்டறியப்பட்டது. இந்த நிறுவனங்களின் போலியான இ வே பில்களின் மூலம் சுமார் ரூ. 100 கோடிக்கு மேல் ஜிஎஸ்டி மோசடி செய்யப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. இது குறித்து மேலும் சோதனைகள் நடைபெறுவதாக ஜி எஸ் டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி