அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் தலா ரூ.1000 தீபாவளி போனஸ்: புதுச்சேரி அரசு அசத்தல்

புதுச்சேரி:

புதுச்சேரி மக்கள் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில், அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் தலா ரூ.1000 தீபாவளி பரிசு வழங்கப்படும் என்று புதுச்சேரி அரசு அதிரடியாக அறிவித்து உள்ளது.

தீபாவளி பண்டிகையின் போது அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும் இனிப்பு பலங்காரங்கள் செய்யும் வகையில்  இலவச சர்க்கரை வழங்கப்படுவது புதுச்சேரியில் வழக்கம். அதுபோல,  வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்துக்கு ஒரு செட் துணிமணிகளும், தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் இலவச துணிமணிகள் வழங்கப்படுவது வழக்கம்.

இந்த நிலையில், கிரண்பேடி புதுச்சேரி ஆளுநராக வந்தபிறகு இலவசங்கள் வழங்கப்படுவதை தடுத்து வருகிறார். கடந்த ஆண்டு ரேசன் கார்டுதாரர்களுக்கு இலவச சர்க்கரை வழங்க அனுமதி வழங்க மறுத்த நிலையில், இந்த ஆண்டாவது இலவச பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வற்புறுத்தி வந்தன.

இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற அனைத்துக்கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில், இலவசங்களை கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்கள் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, மாநிலத்தில் உள்ள  அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் இலவச சர்க்கரை, துணிகளுக்கு பதிலாக ரூ.1000 ரொக்க பணம் தீபாவளி பரிசாக வழங்கப்படும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் துணியை கணக்கிட்டும் அதற்கான பணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கும் இலவச கைலி, சேலை, 2 கிலோ சர்க்கரை ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது காலம் கடந்துவிட்டதால் டெண்டர் வைத்து பொருட்களை வழங்க முடியாது என்பதால் குடும்பத்துக்கு ரூ.1000 வழங்கப்படும் என்று அமைச்சர் கந்தசாமி கூறி உள்ளார்.

இந்த தீபாவளி பரிசு பணம், ரேசன் கார்டுதாரர்களின் குடும்ப தலைவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மாநில தலைமை செயலாளரும், நிதித்துறை செயலாளரும், முதல்வர் நாராயணசாமியுடன் ஒப்புதலோடு இந்த தொகையை செலுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும், ஓரிருநாளில் இத்தொகை வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.