சென்னை மாநகராட்சியில் ரூ.1000 கோடி ஊழல்! ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை:

மாநகராட்சியில் ஆற்றுமணலுக்குப் பதில் எம்-சாண்ட்-ஐப் பயன்படுத்தியதன் மூலம் ரூ.1000 கோடி அளவில்  ஊழல் நடைபெற்றுள்ளது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார். இந்த ஊழல் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

உயர்நீதிமன்றத்தின் உத்திரவுகள் பற்றி சிறிதும் கவலைப்படாமல், “மழை நீர்க் கால்வாய், நடை பாதை அமைக்கும் திட்டங்கள், ஸ்மார்ட் சிட்டி மற்றும் உலக வங்கி நிதியுதவியுடன் நடைபெறும் திட்டங்களில் சென்னை மாநகராட்சியில் விடப்படும் ஒப்பந்தங்களில் ஆற்றுமணல் பயன்படுத்தப்படுவதாக மதிப்பீடு கொடுக்கப்படுகிறது.

ஆனால் பயன்படுத்தப்படுவதோ எம்-சாண்ட்” என்று, அண்மையில், சென்னையில் உள்ள ‘ஹார் லிஸ் ரோடு’ நடைபாதையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. ஆற்றுமணலை விட எம்-சாண்ட் நூற்றுக்கு ஐம்பது சதவீதம் விலை குறைவு என்ற நிலையில், கான்கிரீட் கட்டுமானங் களில் பயன்படுத்தப்படும் ரெடிமிக்ஸ் எம்-30 வகையின் சந்தை விலை 25 முதல் 30 சதவீதம் ஒப்பந்தங்களில் அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளதிலும் ஊழல் என்று செய்திகள் வெளிவருகின்றன.

சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும், மூன்று ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரும் ஊழல் பற்றி லஞ்ச ஊழல் தடுப்புத்துறையின் சார்பில் நடத்தப்பட்ட ‘திடீர் சோதனை’ எத்தனை? எத்தனை டெண்டர் ஊழல்கள் விசாரிக்கப்பட்டன? ஊழல்களை ரகசியமாக விசாரித்து ‘வி.ஆர்.’ எனப்படும் “விஜிலென்ஸ் ரிப்போர்ட்” போடும் வழக்கம் லஞ்ச ஊழல் தடுப்புத் துறையில் இன்னும் இருக்கிறதா? இல்லையா?

ஊழல் அதிகாரிகள் ஓய்வு பெற்றாலும், சட்டத்தின் பிடியிலிருந்து எந்த வழியிலும் தப்பி ஓடிவிட முடியாது என்று எச்சரிக்க விரும்புகிறேன்.ஊழல் குறித்து உடனடியாக உரிய விசாரணை நடத்தி ஊழல் தடுப்புத்துறை தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.