முதியவர்கள், கர்ப்பிணிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை: குமாரசாமி அறிவிப்பு

பெங்களூரு:

முதியவர்கள், கர்ப்பிணிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும், இந்த புதிய திட்டம் அடுத்த மாதம் (நவம்பர்) முதல் அமலுக்கு வரும் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி அறிவித்து உள்ளார்.

கர்நாடக தலைநகர் பெங்களூருவில்  மூத்த குடிமக்கள் தினவிழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கர்நாடக முதல்வர் குமாரசாமி  பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த மூத்த குடிமக்களுக்கு விருதுகளை வழங்கி கவுரப்படுத்தினார்.

அப்போது பேசிய முதல்வர் குமாரசாமி,  மாநிலத்தில் கூட்டணி ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால் ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதாவினர் சதி செய்கிறார்கள், பகல் கனவு காண்கிறார்கள்.  ஆனால், கூட்டணி ஆட்சி வெற்றிகரமாக 5 ஆண்டுகளை நிறைவு செய்யும் என்றார்.

தங்களது ஆட்சியில், ஏற்கனவே விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது. விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பிறகும் வங்கி அதிகாரிகள் விவசாயி களிடம் கடன் கேட்டு நெருக்கடி கொடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது என்று கூறினார்.

மேலும், முதியவர்கள், கர்ப்பிணிகள் குறித்து கவனம்  மாநில அரசு கவனம் செலுத்தி வருவதாகவும், அனைத்து தரப்பு மக்களும் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதே எனது தலைமையிலான அரசின் நோக்கம் என்ற முதல்வர் அதற்கான திட்டங்களை செயல்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன் என்றும் கூறினார்.

மாநிலத்தில் உள்ள 30 மாவட்டங்களில் வசிக்கும் முதியவர்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் உரிய மருத்துவ சிகிச்சைகள் கிடைக்க தேவையான புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும்,  மாநிலத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் அடுத்த மாதம் (நவம்பர்) முதல் அமல்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.

இந்த திட்டம் முதியவர்கள், கர்ப்பிணிகளுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். இந்த திட்டம் பின்னர் விரிவுபடுத்தப்பட்டு முதியவர்கள், கர்ப்பிணிகளுக்கு மாதம் ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும்.  மாநிலத்தில் உள்ள அனைவரும் நிம்மதியாக வாழ இந்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்பது உறுதி.

இவ்வாறு குமாரசாமி பேசினார்.