அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டினால் ரூ.1000 அபராதம்! தமிழகஅரசு அறிவிப்பு

சென்னை:

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வேகமாக வாகனம் ஓட்டினால்,  முதல் முறை குற்றத்திற்கு ரூ.1000 அல்லது 6 மாத கால சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டு இருப்பதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.

இதுதொடர்பாக தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,

பேருந்துகள், சிற்றுந்துகள் ஆட்டோ ரிக்‌ஷாக்கள், ஷேர் ஆட்டோக்கள் மற்றும் மாணவ மாணவி களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அதிக வேகமாகவும், அனுமதிக்கப்பட்ட நபர்களை விட அதிக எண்ணிக்கையில் ஆட்களை ஏற்றிச் செல்வதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. அதைத்தொடர்ந்து, வாகன தண்டனை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,

அதிவேகமாக இயக்கப்படும் வாகனங்கள் முதல் முறை குற்றத்திற்கு ரூ.400 அபராதமும் இரண்டாவது முறை குற்றத்திற்கு ரூ.1000 அபராதமும், மேலும் இவ்வாகனத்தின் உரிமையாளருக்கு வேகமாக ஓட்ட அனுமதித்த குற்றத்திற்காக ரூ.300, மறுமுறை அதே குற்றம் இழைக்கப்பட்டால் ரூ.500 அபராதமும் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அச்சுறுத்தும் வகையில் வேகமாக வாகனம் இயக்கினால் முதல் முறை குற்றத்திற்கு ரூ.1000 அல்லது 6 மாத கால சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இவ்வகை குற்றங்களுக்கு முதலில் குற்றம் செய்த நாளிலிருந்து மூன்று வருடங்களுக்குள் அதே குற்றத்தை இரண்டாவது முறை மற்றும் அதற்கடுத்த முறைகளில் செய்தால், இரண்டு வருடங்கள் சிறைதண்டனை அல்லது ரூ.2000 அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரி வாகனங்கள் மற்றும் போக்குவரத்து வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டு இருக்க வேண்டும். போக்குவரத்து துறை அதிகாரிகளின் தணிக்கையின் போதோ அல்லது தகுதிச் சான்று பெற வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், பகுதி அலுவலகங்களுக்கு வரும் போதோ வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்படாமலோ, அல்லது அக்கருவி இயங்காமல் உள்ளதோ கண்டறியப்பட்டால் அவ்வாகனத்தின் அனுமதிச்சீட்டின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒப்பந்த ஊர்திகள் அனுமதிச்சீட்டின் படி, அனுமதிக்கப்பட்ட நபர்களை விட அதிக ஆட்களை ஏற்றிச் செல்லும் நபருக்கு தலா ரூ.100 வீதம் அபராதம் விதிப்பது மற்றும் அனுமதிச்சீட்டின்மீது நடவடிக்கை எடுக்கும் குற்றமாகும். மேலும் பேருந்துகளில் அதிக ஆட்களை ஏற்றிச் செல்வதற்கு அனுமதிச் சீட்டுக்கு தற்காலிக தடை, அதிக பட்சம் 30 நாட்கள் அல்லது ரூ.9000 வரை இணக்க கட்டணம் வசூலிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஏற்படும் விபத்துகளில் பெரும்பாலானவை வாகனங்களின் அதிகவேகத்தாலும், பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட நபர்களைவிட அதிக ஆட்களை ஏற்றிச் செல்வதாலும் ஏற்படுகிறது. எனவே, அவ்வகை வாகனங்களின் அனுமதிச்சீட்டின் மீது நடவடிக்கையும், அவ்வாகனத்தை இயக்கிய ஓட்டுநரின் உரிமத்தினை மூன்று மாதங்களுக்கு குறையாமல் தற்காலிக தகுதியிழப்பும் செய்யப்படும்.

இதுதொடர்பாக போக்குவரத்து துறையின் அனைத்து அலுவலர்களுக்கும் உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டு, மேற்காணும் குற்றங்கள் கண்டறியப்பட்டால், மோட்டார் வாகன சட்டம் மற்றும் விதிகளின்படி நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் வாகனத்தை பொதுச் சாலையில் இயக்கும்போது, வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டு, அனுமதிக்கப்பட்ட வேகத்திலும், அனுமதிக்கப்பட்ட நபர்களை மட்டும் ஏற்றிச் சென்று பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும்.

மேலும், இதுசம்பந்தமாக பொதுமக்கள் ஏதேனும் புகார் தெரிவிக்க விரும்பினால் தொடர்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்.1800 425 5430 ஆகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You may have missed