கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்திலுள்ள 8000க்கும் மேற்பட்ட சனாதன் பிராமண பூசாரிகளுக்கு, மாதம் ரூ.1000 உதவித்தொகையும், இலவச வீடும் அரசின் சார்பில் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி.

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் மாதங்களே உள்ள நிலையில், மம்தாவின் இந்த அறிவிப்பு உற்று நோக்கப்படுகிறது.

“இந்தவகை பூசாரிகளுக்கு, ஒரு கல்வி நிறுவனத்தை அமைப்பதற்கு, நாம் ஏற்கனவே நிலம் வழங்கியிருந்தோம். இந்தப் பிரிவில் உள்ள பெரும்பான்மை பூசாரிகள், பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள். எனவே, அவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை மற்றும் மாநில அரசின் வீட்டுவசதி வாரியத்தின் கீழ், இலவச வீடுகளும் வழங்குவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது” என்றுள்ளார் மம்தா பானர்ஜி.

“நாங்கள் அனைத்து மொழிகளையும் மதிக்கிறோம். எனவே, புதிய இந்தி அகடமியை நிறுவ முடிவுசெய்துள்ளோம். மேலும், தலித் சாகித்ய அகடமி ஒன்றையும் நிறுவ முடிவெடுத்துள்ளோம். தலித்துகளின் மொழியானது, வங்க மொழியின் மீது செல்வாக்கு செலுத்துகிறது” என்றும் அவர் கூறினார்.