ரூ.10ஆயிரம் கோடி ஒதுக்கீடு: விண்வெளிக்கு 2022க்குள் 3பேரை அனுப்புவோம்! சிவன் பிள்ளை

டில்லி:

ந்திய விண்வெளித்துறை சார்பில் விண்வெளிக்கு மனிதர்கள் அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்துக்கு 10ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க மத்திய கேபினட் ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இஸ்ரோ தலைவர் சிவன்பிள்ளை, திட்டமிட்டபடி விண்வெளிக்கு 2022க்குள் 3பேரை அனுப்புவோம் என்று கூறி உள்ளார்.

இஸ்ரோ தலைவர் சிவன் பிள்ளை

இந்த திட்டம் குறித்து ஏற்கனவே பிரதமர்  மோடி சுதந்திர தின உரையில் குறிப்பிட்டிருந்தார். அப்போது,  ககன்யான் திட்டத்தின் கீழ் 2022-ம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு இந்தியாவிலிருந்து மனிதர்கள் அனுப்பப்படுவார்கள் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அதற்கான திட்டத்துக்கு தற்போது மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்திய விண்வெளித்துறை மூலம் முதன்முதலாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக  ரஷ்யா, பிரான்சுடன் இந்தியா ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்திட்டம் குறித்து இஸ்ரோ ஏற்கனவே தெரிவித்துள்ள தகவலின்படி,  ககன்யான் விண்கலத்தில் 3 வீரர்களுடன், எஸ்எல்வி மார்க் -3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டா வில் இருந்து 2022ம் ஆண்டு ஏவப்பட உள்ளது.

இதற்கு முன்பாக 2 ஆளில்லா விண்கலங்கள் தயாரிக்கப்பட்டு, 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் ஏவப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப் படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ககன்யான் விண்கலம் 3 வீரர்களையும் 300 கி.மீ. முதல் 400 கி.மீ. தூரம் உள்ள புவியின் கீழ் சுற்று வட்டப் பாதைக்கு கொண்டுச் செல்லும். அங்கு 3 வீரர்களும், மைக்ரோ புவியீர்ப்பு சோதனை களை ஒருவாரம் மேற்கொண்டு பிறகு விண்கலம் மூலம் பூமியின் சுற்றுவட்டப் பாதை யில் நுழைவார்கள்.

விண்வெளிக்கு அனுப்ப வடிவமைக்கப்பட்டு வரும்  ககன்யான் விண்கலம்

அவர்கள் செல்லும் ககன்யான் விண்கலம் சுமார் 7 டன் எடை கொண்டது என்றும், இதை பாராசூட் மற்றும் ஏரோ பிரேக் கருவிகள் மூலம் இயக்கி, குஜராத் அருகே கடலில் தரையிறக்கப் படும் எனவும் தெரிவித்து உள்ளது. சுமார் 36 நிமிடங்களில் விண்கலம் தரையிறங்கி விடும் என்று தெரிவித்துள்ள இஸ்ரோ, விண்கலத்தில் உள்ள  விண்வெளி வீரர்கள் கடற்படை உதவியுடன் மீட்கப்பட்டுவார்கள் என்றும், விண்கலம் தரையிறங்குவதில் ஏதேனும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால், மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.

ககன்யான் விண்கலத்தில் செல்லும் வீரர்கள் இனிமேல் தேர்வு செய்யப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட  இருப்பதாகவும் இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

இந்த திட்டத்திற்கு நேற்று பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த திட்டத்தை இந்தியா வெற்றிகரமாக செயல்படுத்தினால், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் நாடுகளில் பட்டியலில்  அமெரிக்கா, ரஷ்யா, சீனாவை தொடர்ந்து இந்தியா 4வது இடத்தை பிடிக்கும்.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறித்து இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறியதாவது,  மத்திய அரசு கடந்த 2004-ம் ஆண்டிலிருந்து விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப வேண்டும் என்று  திட்டமிட்டு வருகிறது. அதை 2022-ஆம் ஆண்டுக்குள் நிறைவோற்றுவோம் என கூறினார்.

இதற்கான திட்டமிடுதல் நடைபெற்று வருவதாகவும், அதற்கு முன்பாக ஆளில்லாமல் இரண்டு விண்கலங்கள் அனுப்பி சோதனை முறையில் அடுத்த 30 முதல் இருந்து 36 மாதங்களுக்குள் செயல்படுத்தப்படும்.  அதன்பிறகே மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் மூன்றாவது திட்டம் 40 மாதங்களுக்குள் அதாவது 2021-ம் ஆண்டிலிருந்து 2022-ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும்  என கூறினார்.