கொல்கத்தா

தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் ரூ.1389 கோடி பெற்றுள்ள கொல்கத்தா நகரம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

தேர்தல் நிதி அளிப்போருக்காக கடந்த 2017-18 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மோடி அரசு தேர்தல் நிதி பத்திரங்களை அறிமுகம் செய்தது.   அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நிதி அளிக்கும் பொது மக்கள், நிறுவனங்கள் உள்ளிட்டோர் இந்த பத்திரங்களை வாங்கி அளிக்கலாம்.    இந்த பத்திரங்களை யார் அளித்தனர் என்னும் விவரங்களை கட்சிகள் தெரிவிக்க வேண்டாம் எனினும் மொத்தம் எவ்வளவு தொகை வந்துள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு நிதி வழங்கும் போது ஒவ்வொரு கட்சிக்கும் எவ்வளவு நிதி வந்துள்ளது என்பதை தேர்தல் ஆணையத்துக்கு அறிவிக்க வேண்டும் என்னும் விதியை பல கட்சிகள் பின்பற்றுவதில்லை.    அதைப் போலவே எவ்வளவு தொகைக்கான பத்திரங்கள் மாற்றப்பட்டது என்பதை பாரத ஸ்டேட் வங்கிக்கு மட்டுமே தெரிந்த விஷயமாக உள்ளது.

சமூக ஆர்வலர் ஒருவர் இது குறித்து அறிய தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மனு ஒன்றை அளித்தார்.  இதற்கு  அளிக்கப்பட்ட பதிலில்  “கடந்த 2018  மார்ச்  முதல் 2019 மே வரை ரூ.5851 கோடி ரூபாய்க்கான தேர்தல் நிதி பத்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன.  இதில் ரூ.1782 கோடியுடன் மும்பை முதல் இடத்திலும் ரூ.1389 கோடியுடன் கொல்கத்தா இரண்டாம் இடத்திலும் உள்ளன.

இதற்கு அடுத்தபடியாக மூன்றாம் இடத்தில் டில்லி ரூ.874 கோடி, நான்காம் இடத்தில் ஐதராபாத் ரூ.806 கோடி மற்றும் ஐந்தாவதாக சென்னை ரூ.184 கோடி என உள்ளன.” என குறிப்பிடப்பட்டுள்ளது

மொத்தமுள்ள மக்களவை தொகுதிகளில்  மேற்கு வங்கத்தில் 7% மட்டுமே உள்ள நிலையில் தேர்தல் நிதி 23.7% அளிக்கப்பட்டுள்ளது.  இது மக்களில் பலருக்கு வியப்பை ஏற்படுத்தி உள்ளது.   அது மட்டுமின்றி தேர்தல் ஆணையம் ஒரு வேட்பாளர் ரூ.70 லட்சம் மட்டுமே செலவழிக்க வேண்டும் என சட்டம் இயற்றியுள்ள நிலையில் இவ்வளவு தேர்தல் நிதி ஏன் பெறப்பட்டது எனவும் ஐயம் எழுந்துள்ளது.

அதே நேரத்தில் பல கட்சிகள் இந்த பத்திரங்கள் மூலம் இல்லாமல் நேரடியாகவும் தேர்த்ல் நிதி பெற்றுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.    அதனால் அவ்வாறு பெறப்பட்ட பணத்தை தவிர இந்த பத்திரங்கள் மூலம்  பெற்றுள்ள நிதி மட்டுமே வங்கிக் கணக்கின் மூலம் அறிய வரும்.  கட்சிகளின் மொத்த வருமானம் என்பது இன்னும் ரகசியமாகவே உள்ளது.