டில்லி,

ரபரப்புக்கு பேர்போன தமிழகத்தை சேர்ந்த நீதிபதி கர்ணன் தற்போது சுப்ரீம் கோர்ட்டுக்கு நஷ்ட ஈடு கேட்டு மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் .

தன்னை அவமானப்படுத்தி விட்டதாக கூறி சுப்ரீம் கோர்ட்டுக்கு அதிரடி கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் தனக்கு ரூ.14 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

சென்னை ஐகோர்ட்டு  நீதிபதியாக இருந்த கர்ணன், கல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.

இவர் ஏற்கனவே,  பிரதமர் அலுவலகம், சட்டத்துறை அமைச்சகம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு சென்னை நீதிபதிகள் குறித்து புகார் கடிதங்களை அனுப்பினார். உடன் வேலை செய்யும் ஒரு நீதிபதியே சக நீதிபதிகள் மீது ஊழல் புகார் அளித்து கடிதம் எழுதியது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்து இதுகுறித்து, சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து கோர்ட் அவமதிப்பு வழக்காக பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது. இந்த வழக்கில் ஆஜராக கர்ணனுக்கு இரண்டு முறை உத்தரவிடப்பட்டது. ஆனால், அவர் ஆஜராகவில்லை.

இந்நிலையில்,கடந்த மார்ச் 10ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி கேஹர் மற்றும் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, செலமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி லோகூர், பினாகி சந்திரகோஸ், குரியன் ஜோசப் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது கர்ணனுக்கு எதிராக ஜாமினில் வெளிவரக்கூடிய வாரன்ட் பிறப்பித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும்,  மேற்குவங்க மாநில காவல் துறைத் தலைவர் அந்த வாரண்டை கர்ணனிடம் அளித்து, அவர் உச்சநீதிமன்றத்தில் மார்ச் 31-ம் தேதி ஆஜராக நடவடிக்கை எடுக்கு மாறு உத்தரவிட்டது.

இது மேலும் பரபரப்பை உருவாக்கியது. பதவியில் உள்ள ஒரு உயர்நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக இவ்வாறு கைது வாரண்ட் பிறப்பிக்கப்படுவது இதுவே முதல் முறை என்றும் கூறப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிர்ப்பு  தெரிவித்த நீதிபதி கர்ணன், சுப்ரீம் கோர்ட்டிற்கு எதிராக உத்தரவு பிறப்பிப்பேன் என அதிரடியாக கூறினார்.

மேலும், தான் தலித் என்பதால் தன் மீது இப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், இந்த உத்தரவைப் பிறப்பித்த நீதிபதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் கர்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சான பெஞ்சுக்கு நீதிபதி பரபரப்பு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.

அதில், தனக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காகவும், பொது மக்கள் முன்னிலையில் அவமானப்படுத்தியதற்காகவும் இழப்பீடாக ரூ.14 கோடி தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.