பிரதமர் மோடி வெளிநாடு பறந்த பயண செலவு ரூ.1484 கோடி: பாராளுமன்றத்தில் தகவல்

--

டில்லி :

பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கு ஆன செலவு  ரூ.1,484 கோடி என்று மத்திய அரசு பாராளுமன்றத்தில் தெரிவித்து உள்ளது.

நாட்டின் பிரதமராக  மோடி பதவி ஏற்ற பிறகு அடிக்கடி  வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. பாராளுமன்ற விவாதங்களில் கலந்துகொள்ளாமல், அவர் வெளிநாடு களுக்கு சுற்றுப்பயணம் செய்தவற்கு கடும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பாராளுமன்ற மேலவையில் உறுப்பினரின் கேள்விக்கு பதில் அளித்த மத்திய வெளியுறவுத்துறை  இணை அமைச்சர் வி.கே.சிங்,  பிரதமராக மோடி பதவியேற்ற 2014 ஜூன் 15 முதல் 2018 ஜூன் 10 வரையிலான காலகட்டத்தில், 42 முறை வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதுவரை அவர் 84 நாடுகளுக்கு சென்றுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த  2015 – 16ம் ஆண்டில் 24 நாடுகளுக்கும்,  2016 – 17ம் ஆண்டில் 18 நாடுகளுக்கும்,  2017 – 18ம் ஆண்டில் 19 நாடுகளுக்கும் மோடி சென்று வந்துள்ளார்.  ஆக மொத்தம்  84 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளதாகவும், இதற்காக  ரூ.1,484 கோடி செலவிடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.

ஆனால், சமீபத்தில்  ஆர்டிஐ கொடுத்துள்ள தகவல்படி,  பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 15-ந்தேதி முதல்  சமீபத்தில் இந்தோனேசியா சென்று வந்தது வரை 52 நாடுகள் சுற்றுப்பயணம் செய்து வந்துள்ளதாகவும், அவரது பயணத்துக்காக  355 கோடியே 30 லட்சத்து 38 ஆயிரத்து 465 ரூபாய் அரசுப் பணம் செலவாகியுள்ளது என்று தெரிவித்து உள்ளது.

ஆர்டிஐ தகவலுக்கும், மத்திய அரசு குறிப்பிட்டுள்ள தகவலுக்கும் பெரும் வேறுபாடு உள்ளது. இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.