ரூ.150 கோடி ஊழல் புகார்: ஆந்திராவில் எதிர்க்கட்சி எம்எல்ஏ அச்சம்நாயுடு அதிரடியாக கைது

ஐதராபாத்: ஆந்திராவில் மருந்து வாங்குவதில் ஊழல் செய்துள்ளதாக கூறி தெலுங்கு தேசம் எம்எல்ஏ அச்சம்நாயுடுவை ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

.ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் இருந்தபோது பல்வேறு துறைகளில் ஊழல் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. அதன் பிறகு கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று முதலமைச்சரான ஜெகன் மோகன் ரெட்டி, சந்திர பாபு நாயுடு ஆட்சியில் நடைபெற்ற பரிவர்த்தனைகள் மற்றும் ஒப்பந்தங்கள் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தார்.

இந்த விசாரணைகள் இப்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதில் மருத்துவக்காப்பீட்டு திட்டத்தில், எம்எல்ஏ அச்சம்நாயுடு, ஐதராபாத்தில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு ஒப்பந்தங்களை வழங்க உத்தரவிட்டிருப்பது தெரிய வந்தது.

திட்டங்களை டெண்டர் விடாமல் தனிப்பட்ட சில நிறுவனங்களுக்கு விதிகளை மீறி அவர் வழங்கியிருப்பதும், இஎஸ்ஐ மருத்துவமனைகளுக்கு மருந்துகள் வாங்குவதிலும் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இன்று ஸ்ரீகாகுளம் மாவட்டம் தெக்காலியில் வீட்டுக்கு சென்ற ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் அவரை கைது செய்து விஜயவாடா அழைத்துச் சென்றுள்ளனர். எதிர்க்கட்சி எம்எல்ஏ கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.