தமிழகத்தில் இதுவரை ரூ.151.88 கோடி பறிமுதல்: சத்தியபிரதா சாஹு

சென்னை:

மிழகத்தில் இதுவரை ரூ.151.88 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும்,  நேற்று மட்டும் 16 லட்சத்து 43 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர்  சத்தியபிரதா சாஹு தெரிவித்து உள்ளார்.

மதுரையில் வாக்குப்பெட்டி வைத்துள்ள அறைக்குள் தாசில்தார் நுழைந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் நடராஜனை இடமாற்றம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், மதுரை மாவட்ட  முன்னாள் ஆட்சியர் நடராஜன் தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹுவுடன் சந்தித்து பேசினார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் ஆணையர், மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர், மதுரையில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக  தன்னை சந்தித்து சம்பவம் தொடர்பாக விளக்கமளித்தார். அவர் கூறிய  விளக்கம் குறித்து ஆய்வு செய்து தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்படும் என்றார்.

மதுரையில் கடந்த 20 ம் தேதி ஒரு வாக்கு எண்ணிக்கை அறையில் நுழைந்தது தொடர்பாக ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. அந்த அறையில் வாக்கு எண்ணும் இயந்திரம் இல்லை. தேர்தல் தொடர்பான ஆவணங்கள் மட்டுமே வைக்கப்பட்டிருந்தது என்றும் தெளிவு படுத்தினார்.

மேலும்,  கரூரில் பாதுகாப்பு தொடர்பாக புகார் வந்தது அது தொடர்பாக கூடுதல் தலைமை தேர்தல் அலுவலர் ராஜாராமன் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்து இருப்பதாகவும், 18ந்தேதி வாக்குப்பதிவின்போது  கன்னியாகுமரியில் வாக்காளர்கள் பெயர் விடுபட்டது தொடர்பாக ஆய்வு நடத்தப்படும் என்றும், அதுபோல  ஸ்ரீகாந்த், சிவகார்த்திகேயன் வாக்குப்பதிவு தொடர்பாக முழு விசாரணை நடத்த கால அவகாசம் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.

சிதம்பரம் தொகுதி பொன்பரப்பியில் வாக்குப்பதிவுக்கு வாய்ப்பில்லை என்றவர்,  வன்முறை தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் யாரும் புகார் தரவில்லை என மாவட்டத் தேர்தல் அலுவலர் அறிக்கை தாக்கல் செய்து இருப்பதாகவும்,  கலைச் செல்வன் ரத்தினசபாபதி பிரபு ஆகிய எம்எல்ஏக்கள் மீது சட்டப்பேரவைத் தலைவரிடம் புகார் மனு அளித்தது தவறில்லை. நோட்டீஸ் அனுப்பினால் அது தேர்தல் விதிமீறல் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கார்ட்டூன் கேலரி