இன்சூரன்சு நிறுவனங்களில் உரிமை கோரப்படாமல் இருக்கும் ரூ.15,167 கோடி: சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்க ஐஆர்டிஏ உத்தரவு

டில்லி:

நாடு முழுவதும் உள்ள பல்வேறு இன்சூரன்சு நிறுவனங்களில், பாலிசிகள் முடிவடைந்தும்  உரிமை கோரப்படாமல்  ரூ.15,167 கோடி அளவிலான பணம் தேங்கி உள்ளது. இந்த பணத்தை சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பதை ஆராய்ந்து, அவர்களிடம்  ஒப்படைக்க ஐஆர்டிஏ உத்தரவிட்டுஉள்ளது.

நாடு முபவதும் 23 காப்பீடு நிறுவனங்கள் பல்வேறு பயன்பாடுகளை கூறி மக்களிடம் இருந்து பாலிசிகள் மூலம் பணம் பெற்று வருகின்றன. இதுபோன்ற பாலிசிகள் போடுபவர்கள் பலர் தொடர்ந்து பணம் கட்ட முடியாமலும், ஒருசிலர் இதுகுறித்து தனது குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவிக்காத நிலையம் மரணம் அடைந்து விடுவதாலும் பல பாலிசிகள் முதிர்வடைந்தும், அதற்கான உரிமை கோரப்பட்டாமல் உள்ளன.

இவ்வாறு பல காப்பீட்டு நிறுவனங்களிடம் உரிமை கோரப்படாமல் 5,167 கோடி  ரூபாய் பணம் தேங்கி இருப்பதா   காப்பீட்டு நிறுவனங்களை ஒழுங்குப்படுத்தும் அமைப்பான ஐஆர்டிஏ தெரிவித்து உள்ளது.

அரசின்பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியில் மட்டும் அதிகபட்சமாக  ரூ.10,509 கோடி உரிமை கோரப்படாமல் உள்ளது.

மற்ற 22 தனியார் காப்பீட்டு நிறுவனங் களிடம் ரூ.4657 கோடி உரிமை கோரப்படாமல் இருப்பதாகவும் ஐஆர்டிஎ புள்ளி விவரம் கூறி உள்ளது.

தனியார் இன்சூரன்சு நிறுவனங்களில் உரிமைகோரப்படாமல் இருக்கும் பணம்

 ஐசிஐசிஐ புருடென்சியல் லைப் காப்பீட்டு நிறுவனம் –  ரூ.807.4 கோடி,

ரிலையன்ஸ் நிப்பான் லைப் காப்பீட்டு நிறுவனம் – ரூ.696.12 கோடி

எஸ்பிஐ லைப் காப்பீட்டு நிறுவனம் – ரூ.678.59 கோடி

ஹெச்டிஎஃப்சி ஸ்டான்டர்ட் லைப் நிறுவனம் – ரூ.659.3 கோடி

இவ்வாறு தேங்கி உள்ள பாலிசிதாரர்கள் பணத்தை,   அந்தத் தொகைக்கு சொந்தமானவர்கள் யார் என்பதை தொழில்நுட்பத்தின் மூலம் கண்டறிந்து, அவர்களிடமோ, அவர்களது வாரிசுதாரர்களிடமோ திருப்பி கொடுக்க  நடவடிக்கை எடுக்கும்படி  ஐஆர்டிஏ உத்தரவிட்டுள்ளது

அதேபோல், காப்பீடு செய்திருப்பவர்கள், பயனாளிகள் உள்ளிட்டோர் தங்களுக்கு அளிக்க வேண்டிய தொகையை காப்பீட்டு நிறுவனங்கள் நிலுவையில் வைத்திருக்கிறதா? என்பதை கண்டறிந்து கொள்வதற்கான வசதியை காப்பீட்டு நிறுவனங்களின் இணையதளத்தில் செய்து தரும்படியும் அந்த நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வசதியின் மூலம், காப்பீட்டு நிறுவனங்களின் இணையதளத்துக்கு சென்று, தங்களது காப்பீட்டு எண், பான் எண், காப்பீடு செய்திருப்போரின் பெயர்கள், பிறந்த தேதி அல்லது ஆதார் எண் ஆகியவற்றை காப்பீடு செய்திருப்போரோ அல்லது பயனாளிகளோ பதிவு செய்தால், அதிலிருந்து காப்பீட்டு நிறுவனங்கள் பாக்கி வைத்திருக்கும் தொகையை தெரிந்து கொள்ளும் வகையிலான வசதியை செய்து தர வேண்டும்.

இவ்வாறு ஐஆர்டிஏ அறிவித்து உள்ளது.