லண்டன்: ராஜஸ்தான் அணியின் கிறிஸ் மோரிஸின் பேட்டிங் & பந்துவீச்சு நிலையாக இருக்காது என்றும், அவர் ரூ.16.25 கோடி விலைக்கு தகுதியானவர் இல்லை என்றும் சாடியுள்ளார் இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன்.

கிறிஸ் மோரிஸ், தென்னாப்பிரிக்காவை சேர்ந்தவர். இதுவரை, ஐபிஎல் தொடர்களில், எந்தவொரு வெளிநாட்டு வீரரும் வாங்கப்படாத அதிக விலைக்கு இவர் வாங்கப்பட்டார். இந்நிலையில், ராஜஸ்தான் அணி, நல்ல வெற்றிகளை குவிக்காத நிலையிலும், மோரிஸின் செயல்பாடு சரியாக இல்லாத காரணத்தாலும், விமர்சனங்கள் எழுந்துள்ளன.

கெவின் பீட்டர்சன் கூறியுள்ளதாவது, “ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் கிறிஸ் மோரிஸுக்கு வழங்கிய தொகை ரூ.16.25 கோடி என்பது மிக அதிகம் என நான் நினைக்கிறேன். ரூ.16 கோடி கொடுத்து ஏலத்தில் எடுக்கும் அளவுக்கு கிறிஸ் மோரிஸ் தகுதியான வீரர் இல்லை. தனக்கு அதிகமான விலை கொடுக்கப்பட்டதன் அழுத்தத்தை தற்போது மோரிஸ் உணர்ந்து வருகிறார். உண்மையில் தென்னாப்பிரிக்க தரப்பிலிருந்து எடுக்க முடிவுசெய்யப்பட்ட முதல் வீரர் மோரிஸ் அல்ல.

அடுத்த சில போட்டிகளில் சிறப்பாக ஆடினாலும் கூட, கிறிஸ் மோரிஸ் நிலையான ஆட்டத்தை அதாவது பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் அளிக்கமாட்டார். அடுத்தசில போட்டிகளிலும் கிறிஸ் மோரிஸ் இடம் பெறவதற்கான வாய்ப்பு இல்லை. நாம் அவரிடம் இருந்து அதிகமாக எதிர்பார்க்கிறோம் அவரைப் பற்றி அதிகமாகப் பேசுகிறோம் என நினைக்கிறேன்.

இதுபோன்ற வீரர், நிலைத்தன்மையுடன் விளையாடுவார் என நான் நினைக்கவில்லை. மிகவும் தன்மையுடன் கூறுகிறேன்; மோரிஸ் என்ன செய்கிறார் என்பதைப் பற்றி சிறப்பாகச் சொல்ல ஏதுமில்லை. 2 போட்டிகளுக்கு ரன் அடிப்பார். அதன்பிறகு, சில போட்டிகளில் காணாமல் போய்விடுவார்” என்று நன்றாக வாரியுள்ளார் பீட்டர்சன்.